×

காட்பாடி வழியாக சென்ற ரயிலில் கடத்திய 12 கிலோ கஞ்சா பறிமுதல்

வேலூர்: காட்பாடி வழியாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திய 12 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்து, கடத்தல்காரர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இருந்து காட்பாடி வழியாக தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் கஞ்சா உட்பட போதை பொருட்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. அவ்வப்போது ரயில்களில் கடத்தப்படும் போதை பொருட்கள் ரயில்வே பாதுகாப்புப்படையின் சிறப்புக்குழுவினர், ரயில்வே போலீசாரால் கைப்பற்றப்பட்டு வருகிறது. மேலும் குற்றவாளிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கேரள மாநிலம், கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று முன்தினம் கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரயில்வே குற்றப்புலனாய்வு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு காட்பாடி ரயில் நிலையத்துக்கு வந்தடைந்த கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில், ரயில்வே குற்றப்புலனாய்வு இன்ஸ்பெக்டர் மதுசூதனன், எஸ்ஐ ஆனந்தன் மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, டி1 கோச்சில் பயணிகள் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று கிடந்த பையில் 12 பொட்டலங்களில் மொத்தம் 12 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ₹2.20 லட்சமாகும். இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து, வேலூர் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். மேலும் கடத்தல்காரர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Katpadi , 12 kg of cannabis seized from a train passing through Katpadi
× RELATED வேலூர் காட்பாடி சாலையில் கழிவுநீர் கால்வாய் அடைப்பால் மக்கள் அவதி