×

அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு இலங்கையில் மக்கள் போராட்டம்: விலைவாசி உயர்வை கண்டித்து கொந்தளிப்பு

கொழும்பு: இலங்கையில் கொரோனா தொற்றினால் அந்நாட்டின் முக்கிய வாழ்வாதாரமான சுற்றுலா துறை பாதிக்கப்பட்டது. இத்துடன் அந்நிய செலாவணிக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பும் வெகுவாக குறைத்தது. இதனால்,  கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, விலைவாசிகள் உயர்ந்துள்ளன.

எரிபொருள் கொள்முதல் செய்வதற்கு கூட போதிய அந்நிய செலாவணி இல்லாமல் அரசு திண்டாடி வருகிறது. எரிபொருள் பற்றாக்குறையினால், பல மணி நேர தொடர் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து விவாதிக்க வரும் 23ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, விலைவாசி உயர்வை கண்டித்தும், அதிபர் கோத்தபய பதவி விலக வலியுறுத்தியும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அதிபர் மாளிகையை நேற்று முற்றுகையிட்டு, அவர் பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல் நாள் போராட்டத்துக்கு எதிர்க்கட்சி தலைவரான ஐக்கிய மக்கள் கட்சியை சேர்ந்த சஜித் பிரேமதாச தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர், ``இரண்டு ஆண்டுகளாக துன்பப்படுகிறீர்கள். இன்னும் துன்பப்பட வேண்டுமா? தற்போது இலங்கையை தீமை ஆண்டு வருகிறது,’’ என்று குறிப்பிட்டார். 3வது நாளான நேற்று போராட்டம் காரணமாக தலைநகர் கொழும்பு, மருதானை, காலி திடல், கோட்டை ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே, நிதி அமைச்சர் பசில் ராஜபக்சேவின் உருவ பொம்மைகளை மக்கள் தீயிட்டு எரித்தனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் சிறப்பு போலீஸ் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி போர்க் களம் போன்று காட்சி அளித்தது.


Tags : Sri Lanka ,Presidential Palace , People's protest in Sri Lanka besieging the Presidential Palace: Turmoil over rising prices
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...