அரையிறுதியில் படோசா

இண்டியன் வெல்ஸ்: அமெரிக்காவில் நடைபெறும் பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, நடப்பு சாம்பியன் பவுலா படோசா தகுதி பெற்றார். காலிறுதியில் ரஷ்யாவின் வெரோனிகா குதெர்மதோவாவுடன் மோதிய படோசா (ஸ்பெயின்) 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 1 மணி, 23 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு காலிறுதியில் மரியா சாக்கரி (கிரீஸ்) 7-5, 6-4 என்ற நேர் செட்களில் கஜகஸ்தானின் எலனா ரிபாகினாவை வீழ்த்தினார். அரையிறுதியில் படோசா - ஆக்கரி மோதுகின்றனர். மற்றொரு அரையிறுதியில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப், போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக்கின் சவாலை சந்திக்கிறார்.

இதே தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோசுடன் மோதினார். டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த முதல் செட்டை 7-6 (7-0) என கைப்பற்றி நடால் முன்னிலை பெற்றார். 2வது செட்டில் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த கிர்ஜியோஸ் 7-5 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. கடைசி செட்டில் பதற்றமின்றி விளையாடிய நடால் 7-6 (7-0), 5-7, 6-4 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 46 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு காலிறுதியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் 6-4, 6-3 என்ற நேர் செட்களில் இங்கிலாந்தின் கேமரான் நோர்ரியை வீழ்த்தினார். அரையிறுதியில் ஸ்பெயினின் அனுபவ வீரர் நடாலுடன் (35 வயது) அதே நாட்டை சேர்ந்த இளம் வீரர் அல்கராஸ் (19 வயது) மோத உள்ளது டென்னிஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

Related Stories: