×

நாய்க்கும் வாழ்வு வரும்!

நன்றி குங்குமம் தோழி

சேல்ஸ்மேன் கேள்விப்பட்டிருக்கோம், சேல்ஸ் வுமன் தெரியும். ஆனா சேல்ஸ் மேனாக ஒரு நாய் நியமிக்கப்பட்டிருக்கு. என்ன கதை விடுறீங்களானு கேட்க தோணுதா. உண்மைதான் அதுவும் அந்த நாய் குறிப்பிட்ட வகையை சேர்ந்தது அல்ல. சாதாரணமாக தெருவில் இருக்கும் நாட்டு நாய் வகையை சேர்ந்ததுதான். அதற்குதான் இந்த யோகம் கிடைச்சிருக்கு.

பிரேசிலில், டஸ்கான் பிரைம் என்ற பெயரிடப்பட்டுள்ள அந்த நாயை சேல்ஸ் பிரதிநிதியாக நியமித்துள்ளது ஹுன்டாய் கார் நிறுவனம். இந்த நாய் பிரேசிலில் உள்ள ஹுண்டாய் நிறுவனத்தின் வாசலில் அடிக்கடி வந்து போகும். அந்த நாய்க்குதான் கார் சேல்ஸ்மேன் பதவியினைக் கொடுத்து கவுரவித்திருக்கிறது அந்த நிறுவனம்.  எப்போதும் ஷோருமே கதி என்று கிடந்த அந்த நாய் குறித்து நிர்வாகத்தின் கவனத்துக்கு சென்றதும் தான் அதிரடி முடிவாக அந்த நாயை சேல்ஸ்மேனாக நியமிப்பது என முடிவு எடுக்கப்பட்டது. பிறகு என்ன இப்போது அந்த நாயின் கழுத்தில் கார் நிறுவனத்தின் பணியாளர் என்பதற்கான அடையாள அட்டையும் தொங்கவிடப்பட்டுள்ளது.

கடந்த மே தான் இந்த நாய்க்கு சேல்ஸ்மேன் பதவியை தந்துள்ளது இந்த நிறுவனம். இப்போது இந்த நாய் பற்றிய செய்தி கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த நாய்க்கு வழங்கப்பட்டுள்ள புரமோஷன் நெட்டிசன்களை கவர்ந்துள்ளது. இதனால் இதுவரை அதற்கு 30 ஆயிரம் லைக்குகள் கிடைத்துள்ளன. அதுமட்டுமின்றி டஸ்கானுக்கு 28 ஆயிரம் பாலோயர்களும் இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் உள்ளனர்.

இப்போது கார் நிறுவனத்தின் புதிய உற்பத்தி பற்றிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் போது இந்த டஸ்கானுக்கும் தனி இருக்கை போடப்பட்டு மீட்டிங்கில் கலந்து கொள்ள அழைப்பு விடப்படுகிறது. விலங்குகளை கவுரவிப்பது பிரேசில் நாட்டினருக்கு இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு பூனைக்குட்டி ஒன்றையும் பிரேசில் கவுரவித்துள்ளது.

புயல் வீசியபோது பல மக்களை காப்பாற்றி உயிர்பிழைக்க செய்ததற்காக அந்த பூனைக்குட்டிக்கு இதேபோல் அட்டர்னி ஆப் பிரேசில் என்ற பட்டம் கொடுத்து, தனி அடையாள அட்டை வழங்கி கவுரவித்தது மற்றொரு நிறுவனம். யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும் என்பார்கள். இப்போது பூனை மட்டுமின்றி நாய்க்கும் வாழ்வு வந்துவிட்டதாகத்தான் தோன்றுகிறது.

தொகுப்பு: கோமதி பாஸ்கரன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags :
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!