×

பரமக்குடி அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த குடும்பத்தினர் அதிரடியாக மீட்பு-ரூ.60 ஆயிரம் கடனுக்காக கொடுமைப்படுத்தியது அம்பலம்

பரமக்குடி : பரமக்குடி அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பயன்படுத்தப்பட்ட குடும்பத்தினரை வருவாய்த்துறையினர் மீட்டனர்.மயிலாடுதுறை மாவட்டம், அகர எலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சகாதேவன். இவர், மனைவி ரேவதி மற்றும் 3 குழந்தைகளுடன் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே கே.வலசை கிராமத்தில் உள்ள செங்கல் சூளைக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்கு வந்தார். அப்போது ரூ.60 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார். மேலும், அவர்களுக்கு தினமும் 1,000 கல்லுக்கு ரூ.800 ஊதியமாக வழங்கப்படும். குழந்தைகளை படிக்க வைக்க ஏற்பாடு செய்யப்படும் என செங்கல் சூளை உரிமையாளர் கூறியுள்ளார்.

ஆனால், வாரத்தில் ரூ.1,500 மட்டுமே கூலி கொடுத்துள்ளனர். மேலும், அவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப மறுத்துள்ளனர். குழந்தைகளை அடமானமாக வைத்து விட்டுதான் வெளியே சென்று வரவேண்டும் என அடித்து கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட சார்பு நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு சகாதேவன் புகார் அனுப்பினார்.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில், பரமக்குடி கோட்டாட்சியர் முருகன், வட்டாட்சியர் தமிம்ராஜா ஆகியோர் தலைமையிலான வருவாய்த்துறையினர் நேற்று செங்கல் சூளையில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்த சகாதேவன் குடும்பத்தை பத்திரமாக மீட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு உரிய நிவாரணம் கொடுத்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : Paramakudi , Paramakudi: Revenue officials rescue families who were used as slaves in a brick kiln near Paramakudi. Mayiladuthurai
× RELATED மகளை திருமணம் செய்து கொடுக்காததால்...