×

காவல்கிணறு- நாகர்கோவில் 4 வழிசாலையில் மே மாதம் முதல் வாகன போக்குவரத்து-வளர்ச்சி குழு கூட்டத்தில் அதிகாரி தகவல்

நாகர்கோவில் : பணி நிறைவு பெற்ற காவல்கிணறு- நாகர்கோவில் 4 வழி சாலையில் மே மாதம் முதல் வாகன போக்குவரத்து தொடங்கும் என்று நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதிகாரி தெரிவித்தார்.குமரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் அரவிந்த் தலைமை வகித்தார். விஜயகுமார் எம்.பி, விஜய்வசந்த் எம்.பி,  ராஜேஷ்குமார்எம்.எல்.ஏ , நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ், துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் தனபதி,  நகர்மன்ற தலைவர்கள் ஆசைத்தம்பி, அருள்சோபன், நசீர், ராணி, ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர்கள், துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 மாவட்டத்தில் நான்கு வழி சாலை பணிகள் கேரள எல்லை முதல் வில்லுக்குறி வரை 76.54 சதவீத பணிகள் நடந்துள்ளது. 14.9 கி.மீ  பணிகள் முடிவடைந்துள்ளது. வில்லுக்குறி முதல் கன்னியாகுமரி வரையில் 77.8 சதவீத பணிகள் முடிந்து 29.9 கி.மீ பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. போதிய அளவு மண் கிடைக்காததால் பணிகள் முடங்கியுள்ளன. குமரி மாவட்டத்தில் 4 வழி சாலை பணி  காவல்கிணறு முதல் நாகர்கோவில் வரை மார்ச் மாதம் முடிக்கப்படும். மே மாதம் முதல்  போக்குவரத்து அனுமதி வழங்கப்படும்  என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ கூறுகையில், வாழ்வச்சகோஷ்டம்,  கப்பியறை பேரூராட்சி பகுதிகளில் நான்கு வழி சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீட்டு தொகை இன்று (நேற்று) வங்கி கணக்கில் வந்துவிடும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்களை உடனே வீடுகளை காலி செய்ய வேண்டும் எனவும், வீடுகளை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். அவர்களுக்கு வீடுகளிலிருந்து உடமைகளை எடுத்துச் செல்ல இரண்டு நாள்கள் அனுமதி வழங்க வேண்டும். அதுவரை வீடுகளை இடிப்பதை தள்ளி வைக்க வேண்டும் என்றார்.

விஜயகுமார் எம்பி கூறுகையில், இது தொடர்பாக அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், எம்எல்ஏவின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றார்.
குடிநீர் திட்டப்பணிகளில்  அழகியபாண்டிபுரம் கூட்டு குடிநீர் திட்டம் பணிகள் நிறைவு பெற்றுள்ளது, இரணியல், நாகர்கோவில், குழித்துறை குடிநீர் திட்டப்பணிகள் மே மாதம் முதல் செயல்பாட்டிற்கு வரும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் அதிக பாரத்துடன் செல்வதால் அதிகப்படியாக  விபத்துக்கள், உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது,  இதனை தடுக்க 16, 18 டன் பாரங்களுடன் செல்கின்ற கன ரக வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என விஜயகுமார் எம்.பி கேட்டுக்கொண்டார். அப்போது பேசிய வட்டார போக்குவரத்து அலுவலக அலுவலர், ‘கடந்த ஜனவரி மாதம் 12, பிப்ரவரியில் 12, மார்ச் 15 வாகனங்கள் என மொத்தம் 39 வாகனங்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி பாரம் ஏற்றி வருகின்ற வாகனங்களில் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனவும்  தெரிவித்தார்.

 விஜயகுமார் எம்.பி பேசுகையில், ‘குமரி மாவட்ட மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்,  சாலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனில் அபராதம் விதித்தால் மட்டும் போதாது. ஒருமுறை அபராதம் விதிக்கப்பட்ட பின்னர் தொடர்ந்து அதிக பாரம் ஏற்றி செல்லும் அதே கனரக வாகனங்களின் பெர்மிட்களை ரத்து செய்ய  மாவட்ட கலெக்டருக்கு வட்டார போக்குவரத்து அதிகாரி பரிந்துரை செய்ய வேண்டும்’ என விஜயகுமார் எம்.பி வலியுறுத்தினார்.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டரும் உறுதியளித்தார். மேயர் மகேஷ் கூறுகையில், ‘நாகர்கோவில் மாநகராட்சியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உலக்கை அருவியில் இருந்து குழாய் மூலம் முக்கடல் அணைக்கு குடிநீர் ெகாண்டுவரும் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

 அதிகாரிகள் வருவது இல்லை

குமரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொள்வது இல்லை. கீழ்நிலையில் உள்ள அதிகாரிகளை அனுப்பி வைத்துவிடுகின்றனர். நேற்று தேசிய நெடுஞ்சாலைத்துறையில் இருந்து உயர் அதிகாரிகள் கூட்டத்திற்கு வருகை தரவில்லை. இதனால் மாவட்டத்தின் முக்கிய விஷயமான 4 வழி சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்படவில்லை.

வர இயலாத அதிகாரிகள் முன்கூட்டியே மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் கேட்டுக்கொண்டார்.  கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் சோலார் வசதி ஏற்படுத்த கடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்க வந்த அதிகாரி அதுபற்றி எந்த பதிலும் தெரிவிக்காமல் குழப்பம் அடைந்தார். பொதுவாக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளால் விவாதிக்கப்பட்டும் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக நடத்தப்படும் இதுபோன்ற கூட்டங்கள் பெரிதும் பயன் அளிக்காத நிலையில் புள்ளி விபரங்களை தாக்கல் செய்யும் அளவுக்கு மாறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திட்டப்பணிகளை செயல்படுத்த இடையூறா?

கூட்டத்தில்  கலெக்டர் அரவிந்த் பேசுகையில்,  பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) வாயிலாக குளங்கள், ஆறுகள், நீரோடைகள், அணைகள் ஆகியவற்றிலுள்ள மதகுகள் உள்ளிட்டவைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அதனை உடனடியாக சரிசெய்தும், பாலப்பணிகளை பொதுமக்களுக்கு இடையூறுமின்றி விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். இந்த இத்திட்டப்பணிகளை செயல்படுத்த ஏதேனும் இடையூறுகள் இருந்தால் அவற்றை உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்’ என்றார்.

Tags : Vehicle Traffic-Development Committee ,Route 4 ,Kavalkinara-Nagercoil , Nagercoil: Completed Kavalkinaru- Nagercoil 4 way road will start traffic from May
× RELATED பனகல் பூங்காவில் சுரங்கம் அமைக்கும்...