×

வேலூர் அருகே குடோனில் பதுக்கிய 24 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல்-உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை

வேலூர் : வேலூர் அருகே 24 டன் ரேஷன் அரிசி லாரியுடன் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.வேலூர் அருகே உள்ள குடோனில் பதுக்கி ரேஷன் அரிசி கடத்துவதாக வேலூர் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் நேற்று பொய்கை மோட்டூர் பகுதியில் ரகசியமாக கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, பிரசாந்த் நகரில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் ஒரு லாரி நின்று கொண்டு இருந்தது. லாரியை போலீசார் சோதனை செய்தனர்.  அதில், டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக வேலூர் காகிதப்பட்டறை பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் கார்த்தி(31) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அருகில் ஒரு குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த குடோனில் போலீசார் சோதனையிட்டனர். அங்கு மூட்டைகளில் ரேஷன் அரிசி அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த குடோன் உரிமையாளர் தனபால்(55) என்பவரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 475 மூட்டைகள் இருந்த லாரியுடன் 24 டன் ரேஷன் அரிசியும், ஒரு மூட்டை கோதுமையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

மேலும், ரேஷன் அரிசியை அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவுக்கு கடத்தி சென்று, கடந்த மாதங்களாக விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. ரேஷன் அரிசியை கடத்துபவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர்.

Tags : Gudon ,Velur , Vellore: The Anti-Food Smuggling Squad seized 24 tonnes of ration rice lorry near Vellore. 2 people were arrested in this connection
× RELATED பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஒரே நாளில்...