×

ஜி-23, சோனியா ஆதரவு தலைவர்கள் சந்திப்பு: காங்கிரசில் சலசலப்பு

புதுடெல்லி: கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலை ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் சந்தித்தது. இதில் கட்சி படுதோல்வி அடைந்ததால், அதற்கு பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். இதைத் தொடர்ந்து கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி நியமிக்கப்பட்டார்.  இன்று வரையில் அவர் இப்பதவியில் நீடிக்கிறார். இதற்கு  காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உட்பட 23 மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ‘நாளுக்கு நாள் கட்சி பலவீனமாகி வருவதால், தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தி புதிய ஒருவரை முழு நேர தலைவராக்க வேண்டும்,’ என்று இத்தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

‘ஜி23’ என்ற பெயரால் அழைக்கப்படும் இந்த அதிருப்தி தலைவர்கள், கடந்த 2019ல் நடந்த செயற்குழு கூட்டத்துக்கு முன்பாக சோனியாவுக்கு  இது பற்றி கடிதம் எழுதியதில் இருந்து இந்த சர்ச்சை நீடித்து வருகிறது. சமீபத்தில் முடிந்த 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து, ஜி 23 தலைவர்களின் செயல்பாடு மீண்டும் தீவிரமாகி இருக்கிறது. கட்சி தலைமை பற்றி இவர்கள் வெளியிடும் கருத்துகள், கட்சிக்குள் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், 5 மாநில தேர்தல் முடிவு வெளியான 10ம் தேதியே குலாம் நபி ஆசாத்தின் வீட்டில் சில அதிருப்தி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

உடனே, காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை  சோனியா காந்தி கூட்டினார். அதில், கட்சியின் இடைக்கால தலைரவாக சோனியா தொடர்வார் என்றும், கட்சி அமைப்பு தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்றும்  அறிவிக்கப்பட்டது. அதிருப்தி தலைவர்களுக்கு இதுவும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், ‘ஜி 23’ தலைவர்கள் நேற்று முன்தினம் இரவு குலாம் நபி ஆசாத்தின் டெல்லி வீட்டில் கூடி ஆலோசனை நடத்தினர். இதில், சோனியாவுக்கு நெருக்கமான பிருத்விராஜ் சவான், பூபிந்தர் சிங் ஹூடா, ராஜ் பப்பர், மணி சங்கர் ஐயர், குரியன், ராஜேந்திர கவுர் படேல், குல்தீப் சர்மா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பின்னர் ஜி-23 தலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், ‘அனைத்து மட்டங்களிலும், அனைவரையும் உள்ளடக்கிய, அனைத்து கட்டங்களிலும் முடிவெடுக்கும் தலைமையே காங்கிரசுக்கு இப்போதைய தேவை. பாஜ.வை எதிர்க்க, கட்சியை மேலும் வலுப்படுத்துவது அவசியம். 2024 மக்களவை தேர்தலை சந்திக்க, நம்பகமான தளத்தை உருவாக்குவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் விரைவில் அறிவிக்கப்படும்’ எனக் கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டத்துக்குப் பிறகு சோனியாவுடன் குலாம் நபி ஆசாத் தொலைபேசியில் பேசி, கூட்டத்தில் பேசப்பட்ட விவரங்களை கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்த கூட்டத்தில் பங்கேற்ற அரியானா முன்னாள் முதல்வரும், மூத்த தலைவருமான பூபிந்தர் சிங் ஹூடாவை ராகுல் காந்தி நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு குலாம் நபி ஆசாத்தின் வீட்டுக்கு சென்று ஹூடா ஆலோசனை நடத்தினார். இதில், ஆனந்த் சர்மா உள்ளிட்ட சில ஜி23 தலைவர்களும் பங்கேற்றனர். இதனால், சோனியா ஆதரவாளர்களும், ஜி23 தலைவர்களும் இணைந்து, கட்சியை பலப்படுத்துவதற்கான புதிய திட்டத்தை வகுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரசில் அடுத்தடுத்து நடக்கும் இந்த சம்பவங்கள், தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags : G ,-23 ,Sonia ,Bustle ,Congress , G-23, Sonia-backed leaders meet: Bustle in Congress
× RELATED ஜி பே ஸ்கேன் பண்ணுங்க… மோடி ஸ்கேம் பாருங்க… தெறிக்கவிட்ட போஸ்டர்கள்