×

ஐஐஎம்-ன் தலைவராக தகுதியற்ற ஒருவரை நியமித்தது உண்மையே : 5 ஆண்டுகளுக்கு பின் ஒன்றிய அரசு ஒப்புதல்

சண்டிகர் : இந்தியாவில் உயரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படும் ஐஐஎம்-ன் தலைவராக தகுதியற்ற ஒருவரை நியமித்தது உண்மையே என 5 ஆண்டுகளுக்கு பின் ஒன்றிய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. ஒன்றிய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐஐஎம் எனப்படும் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் 21 நகரங்களில் செயல்பட்டு வருகின்றன. ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கில் உள்ள ஐஐஎம் கல்வி நிறுவனத்தின் தலைவராக 2017ம் ஆண்டு நியமிக்கப்பட்ட தீரஜ் ஷர்மாவின் கல்வி தகுதி குறித்து சர்ச்சை எழுந்தது. தகுதியற்ற ஒருவர் ஐஐஎம் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால் அதனை ரத்து செய்யக் கோரி பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதில் இளங்கலை பட்டப்படிப்பை 2ம் வகுப்பில் முடித்த தீரஜ் ஷர்மா முதல் வகுப்பில் பட்டம் பெற்றதாக கூறி முறைகேடாக பதவியை பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. கடந்த ஆண்டு இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்த 60 பேரில் ஒருவர் கூட புகார் கூறாததால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கல்வி அமைச்சகம் வலியுறுத்தியது. வழக்கு நடந்து கொண்டு இருக்கும் நிலையிலும் 5 ஆண்டுகள் பணிக்காலத்தை நிறைவு செய்த தீரஜ் ஷர்மா, மீண்டும் ஐஐஎம் ரோஹ்தக் தலைவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது ஹரியானா நீதிமன்றத்தில், ஒன்றிய கல்வி அமைச்சகம் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், தகுதியற்ற ஒருவர் ஐஐஎம் தலைவராக நியமிக்கப்பட்டதை ஒப்புக் கொண்டுள்ளது. இளங்கலை பட்டத்தில் முதல் வகுப்பு பெற்று இருக்க வேண்டிய நிலையில் தீரஜ் ஷர்மா 2ம் வகுப்பு மட்டுமே பெற்றுள்ளதை உறுதி செய்துள்ள ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகம் 2வது முறை அவரது நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறியுள்ளது.

ஆனால் 2018ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் ஐஐஎம் நிர்வாகமே தலைவரை நியமித்ததாகவும் கடந்த 2017ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை குழுவே தீரஜ் ஷர்மா நியமனத்திற்கு ஒப்புதல் வழங்கியதை சுட்டிக்காட்டி தங்களது எதிர்ப்பை புறந்தள்ளிவிட்டு நியமனம் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஒன்றிய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் கல்வி தகுதி பற்றிய ஆதாரங்களை அளிக்கும்படி தீரஜ் ஷர்மாவுக்கு 3 முறை நோட்டீஸ் அனுப்பியும் பதில் அளிக்காத அவர், 5 ஆண்டு பணிக்காலம் நிறைவுக்கு பின்னரே பதில் அளித்து உள்ளதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது.

Tags : IIM ,United States government , IIM, United States Government, Approval, Education, Eligibility
× RELATED கோவையில் என்.ஐ.ஏ. கிளை அலுவலகம், 4 நவோதயா...