×

'தாலிபான் போன்ற அமைப்புகளை சேர்ந்தவர்கள் போலவே உள்ளனர்'!: ஹிஜாப் தடைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த மாணவிகளை தீவிரவாதிகள் என விமர்சித்த பாஜக நிர்வாகி..!!

பெங்களூரு: ஹிஜாப் தடை செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடகாவில் இஸ்லாமிய அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனிடையே ஹிஜாப் தடையை எதிர்த்து வழக்கு தொடர்ந்த மாணவிகளை தீவிரவாதிகள் என பாஜக நிர்வாகி ஒருவர் விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கல்வி நிலையங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்வதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், தடையை உறுதி செய்தது. இதனை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இந்நிலையில் ஹிஜாப் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கர்நாடகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிசோடி காணப்படுகின்றன. பெங்களூருவில் சிவாஜி நகர், டானரி சாலை, கோல்ஸ் பார்க், கப்பன் பார்க் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இஸ்லாமியர்களின் போராட்டத்திற்கு தலித் அமைப்புகள், பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதனிடையே ஹிஜாப் தடைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த 6 மாணவிகளையும் தீவிரவாதிகள் என உடுப்பி பெண்கள் பி.யூ. கல்லூரி வளர்ச்சிக்குழு துணைத்தலைவரும், பாஜக நிர்வாகியுமான யஸ்பால் சுவர்ணா விமர்சித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய அவர், நமது நீதித்துறையை மதிக்கவில்லை என்றால், வெளியே சென்று விடலாம். அவர்களுடைய நடவடிக்கைகள் தீவிரவாதிகளை போலவே இருக்கின்றன. தாலிபான் போன்ற அமைப்புகளை சேர்ந்தவர்கள் போலவே உள்ளனர்.

நீதித்துறையை குற்றம்சாட்டுகின்றனர். அவர்கள் நமது அரசியலமைப்புக்கும், நீதித்துறைக்கும் எதிராக இருக்கிறார்கள் என்று தெரிவித்தார். ஹிஜாப் தடையை எதிர்த்து வழக்கு தொடர்ந்த மாணவிகளை தீவிரவாதிகள் என பாஜக நிர்வாகி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக நிர்வாகி யஸ்பால் தனது கருத்துக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.


Tags : Taliban , Taliban, hijab ban, student, extremists, BJP executive
× RELATED ஆப்கானிஸ்தானில் 13 வயதிற்கு மேல் பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல தடை