×

சித்திரை திருவிழாவை முன்னிட்டு மானாமதுரை வைகை ஆற்றை சுத்தம் செய்யும் பணி துவக்கம்

மானாமதுரை: மானாமதுரையில் சித்திரைத் திருவிழா தொடங்க உள்ளதை முன்னிட்டு வைகை ஆற்றை சுத்தம் செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. மானாமதுரை ஆனந்தவல்லி சமேத சோமநாதர் சுவாமி கோயில், வீர அழகர் கோயிலில் சித்திரை திருவிழா தொடர்ந்து 20 நாட்கள் நடைபெறும்.
வைகை ஆற்றின் இருகரைகளிலும் இந்த கோயில்கள் அமைந்துள்ளதால் திருவிழாவிற்கான கலைநிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு அம்சங்களான ராட்டினங்கள், திருவிழாக் கடைகள் போன்றவை வைகை ஆற்றுக்குள் அமைக்கப்படுவது வழக்கம்.

சித்திரைத் திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்வாக ஆற்றில் அழகர் இறங்கும் வைபவம் ஆற்றுக்குள் நடைபெறும். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மானாமதுரையில் சித்திரை திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு விரைவில் மானாமதுரையில் தொடங்கவுள்ள சித்திரை திருவிழாவை மிகவும் சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதையடுத்து சித்திரை திருவிழாவிற்காக மானாமதுரை நகர்ப் பகுதி வைகை ஆற்றை நகராட்சி நிர்வாகம் மூலம் சுத்தம் செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சித் தலைவர் மாரியப்பன் கென்னடி, துணைத் தலைவர் பாலசுந்தரம், ஊராட்சி ஒன்றியத் தலைவர் லதா அண்ணாத்துரை, துணைத் தலைவர் முத்துசாமி, நகராட்சி ஆணையர் கண்ணன், நகர செயலாளர் பொன்னுச்சாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Manamadurai Vaigai River ,Chithirai Festival , Chithirai Festival, Manamadurai, Vaigai,
× RELATED மானாமதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி இறங்கினார் வீரஅழகர்