2021ம் ஆண்டிற்கான உலக அழகியாக மகுடம் சூடினார் போலந்தின் கரோலினா!: 2ம் இடத்தை பிடித்தார் அமெரிக்கா வாழ் இந்தியர் ஸ்ரீ சைனி..!!

சான் ஜுவான்: 2021ம் ஆண்டிற்கான உலக அழகியாக போலந்து நாட்டை சேர்ந்த கரோலினா பைலாவ்ஸ்கா மகுடம் சூடியிருக்கிறார். போர்ட்டோரிகோ தலைநகர் சான் ஜுவான் உள்ள கோகோ கோலா அரங்கில் 70வது உலக அழகி போட்டி கோலாகலமாக நடைபெற்றது. 97 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்துக்கொண்டு பல்வேறு பிரிவுகளில் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்தியா சார்பில் ஹைதராபாத்தை சேர்ந்த மானசா வாரணாசி போட்டியிட்டார். அவரால் டாப் 13 வரை மட்டுமே செல்ல முடிந்தது. இறுதி சுற்றில் போலந்து நாட்டை சேர்ந்த 23 வயதான கரோலினா உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு கடந்த முறை உலக அழகி பட்டம் வென்ற டோனி ஆன்சிங் மகுடம் சூட்டினார்.

அமெரிக்க வாழ் இந்தியரான ஸ்ரீசைனி 2ம் இடமும், ஐவரி கோஸ்ட்  நாட்டை சேர்ந்த ஒலிவியா 3ம் இடமும் பிடித்தனர். பஞ்சாபில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய ஸ்ரீசைனி, சிறு வயதிலேயே இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். கார் விபத்து ஒன்றில் முகத்தோல் கருகிய நிலையில், அத்தடைகளை படிக்கற்களாக மாற்றி அழகி போட்டியில் முத்திரை பதித்திருக்கிறார். 2021ம் ஆண்டிற்கான இப்போட்டி கொரோனா பரவல், இந்திய அழகி உள்ளிட்டவர்களுக்கு தொற்று பாதிப்பு ஆகிய காரணங்களால் இறுதி போட்டி தாமதமாக நடைபெற்றது.

Related Stories: