இரவில் நடுங்கும் குளிர், பகலில் தகிப்பு: வேலூரில் 101 டிகிரி வெயில் வாடி வதங்கிய மக்கள்

வேலூர்: இரவில் நடுங்க வைக்கும் குளிரும், பகலில் தகிக்கும் வெயிலும் என கடந்த சில நாட்களாக சீதோஷ்ண நிலை இருந்த நிலையில் நேற்று முதன்முறையாக வேலூர் மாவட்டத்தில் 101 டிகிரி வெயில் சுட்டெரித்தது. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் பிப்ரவரி மாதம் இறுதியில் கோடையின் தாக்கம் துவங்கி விடும். மார்ச் மாதம் இரண்டாவது வாரம் நடந்து வரும் நிலையில் தமிழகத்தின் பல நகரங்களில் வெயிலின் அளவு சதத்தை கடந்து சென்றது.

ஆனால் வெயிலூர் என்று பெயர் பெற்ற வேலூர் உள்ளடங்கிய மாவட்டத்தில் கடந்த வாரம் 96 முதல் 98 டிகிரி வரை மாறி, மாறி தகித்த வெயில் நேற்று முன்தினம் 99 டிகிரியை எட்டியது. ஆனாலும் இரவு நேரங்களில் குளிர் வாட்டி வதைத்தது. நேற்று காலை 8 மணி வரை குளிர் சீதோஷ்ணம் நிலவிய நிலையில் காலை 10 மணியளவில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது. பகல் முழுவதும் வெயில் சுட்டெரித்தது.

மாலை 4 மணி வரை வேலூர், குடியாத்தம், பேரணாம்பட்டு என மாவட்டத்தின் இதர பகுதிகளில் சுட்டெரித்த வெயில் 101.1 டிகிரி பதிவாகி இருந்தது. இதனால் காலை 11 மணி தொடங்கி மாலை 4 மணி வரை சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. வாகனங்களின் எண்ணிக்கையும் குறைந்தது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘அடுத்த சில நாட்களில் வெயிலின் அளவு படிப்படியாக மேலும் அதிகரிக்கும்’ என்றனர்.

Related Stories: