×

திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் ராகு பெயர்ச்சியையொட்டி லட்சார்ச்சனை துவக்கம்

கும்பகோணம்: கும்பகோணத்தில் உள்ள நவக்கிரக தலங்களில் ராகு பகவான் தலமாக போற்றப்படும் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் ராகு பெயர்ச்சியையொட்டி லட்சார்ச்சனை விழா துவங்கியது. கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் அமைந்துள்ள கிரிகுஜாம்பிகை சமேத நாகநாத சுவாமி திருக்கோவில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இத்தலத்தில் திருமால், சூரியன், சந்திரன் உள்ளிட்ட தேவர்களும் ராகுபகவான் நாகநாத சுவாமியை மகா சிவராத்திரி அன்று வழிபட்டு தனது பாவத்தை நிவர்த்தி செய்த தலமாகும்.

நவக்கிரக தலங்களில் ராகு பகவான் தலமாக போற்றப்படும் இத்தலத்தில் வருகிற 21ம் தேதி திங்கட்கிழமை பிற்பகல் 3.13 மணிக்கு ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பிரவேசிக்கும் விழாவானது நான்கு கால மகா யாகம், அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பாக நடைபெற உள்ளது. ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பிரவேசம் செய்வதால் மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம் மற்றும் மீனம் ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்வது நன்மை பயக்கக் கூடியதாகும். இதனையொட்டி நேற்று காலை முதல் லட்சார்ச்சனை தொடங்கியது. இதில் சிவாச்சாரியார்கள் லட்சம் முறை மந்திரங்கள் சொல்லி மலர்களைக் கொண்டு ராகு பகவானுக்கு அர்ச்சனை செய்தனர். பின்னர் மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ராகு பகவானை வழிபட்டனர்.

Tags : Latcharchana ,Rahu ,Thirunageswaram Naganathaswamy Temple , Thirunageswaram, Naganathaswamy, Rahu shift
× RELATED திருமணத் தடைக்கான காரணங்கள்!