×

அரூரில் விலை வீழ்ச்சியால் தக்காளியை சாலையோரம் கொட்டும் விவசாயிகள்

அரூர்: அரூர் சுற்றுவட்டார பகுதியில் தக்காளி விலை கிலோ ₹5க்கு விற்பனையாவதால், விற்பனையாகாத தக்காளியை, விவசாயிகள் சாலையோரம் கொட்டிச்செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி விளைச்சல் குறைந்ததால் கிலோ ₹100 வரை மார்க்கெட்டில் விற்பனையானது. தற்போது, சீசன் காரணமாக தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைகளில் வரத்து அதிகரித்து தக்காளி விலை சரிந்தது.

இதனால் தற்போது தக்காளி முதல் ரகம் (27 கிலோ எடை கொண்ட) ஒரு பெட்டி ₹75 முதல் ₹85 வரை வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர். இதனால் பறிப்பு கூலிக்கு கூட கட்டுப்படி ஆகவில்லை. இதையடுத்து பல இடங்களில் விவசாயிகள் தக்காளியை செடிகளில் இருந்து பறிக்காமல் அப்படியே விட்டுள்ளனர். மேலும், சிலர் தக்காளியை ஏரிகளில் வளர்க்கப்படும் மீனுக்கு உணவாகவும் பயன்படுத்துகின்றனர். மார்க்கெட், உழவர் சந்தைகளில் விற்பனை ஆகாத தக்காளியை திரும்பு எடுத்துவர வாகனத்துக்கு வாடகை  செலுத்த வேண்டி உள்ளதால், சாலையோரம் கொட்டிச்செல்கின்றனர்.

தவிர சில வியாபாரிகள் கிருஷ்ணகிரி ஜூஸ் பேக்டரிக்கு விற்பனை செய்கின்றனர். இதுகுறித்து விவசாயி கூறுகையில், ‘ஒரு ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்ய ஒரு லட்ச ரூபாய் செலவாகிறது. வரத்து அதிகரித்து தக்காளி விலை சரிந்ததால், ₹20 ஆயிரம் கூட எடுக்க முடியவில்லை. மொத்தமாக இருப்பு வைக்க, குளிர்பதன குடோன்களை அரசு அமைக்க வேண்டும்,’ என்றார்.


Tags : Arur , Prices in Aroor, fall, tomatoes, farmers
× RELATED விஷ செடிகளுக்கு தமிழக மண்ணில் இடம்...