×

நெல்லை களக்காடு அருகே போலீசை தாக்கி தப்ப முயற்சி பிரபல ரவுடி நீராவி முருகன் என்கவுன்டரில் சுட்டுக் கொலை: தாக்கியதில் எஸ்ஐ உட்பட 5 பேர் காயம்

களக்காடு: நெல்லை களக்காட்டில் நேற்று காலை பிரபல ரவுடி நீராவி முருகனை கொள்ளை வழக்கில் திண்டுக்கல் போலீசார் சுற்றிவளைத்தபோது தாக்கியதில் எஸ்ஐ உட்பட 5 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டான். தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் அருகே  நீராவிமேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவன் மீது, தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை,  வழிப்பறி உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.  சமீபத்தில்  பழனியில் 40 பவுன் கொள்ளையடிக்கப்பட்டதில்  நீராவி முருகனை திண்டுக்கல் போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் நெல்லை  மாவட்டம் களக்காடு அருகே சுப்பிரமணியபுரம், பத்தை, மங்கம்மாள் சாலையில்  நீராவிமுருகன் பதுங்கியிருப்பதாக தகவல் அறிந்து திண்டுக்கல் எஸ்ஐ இசக்கிராஜா தலைமையிலான தனிப்படையினர் நேற்று காலை களக்காடு மீனவன்குளத்திற்கு வந்தனர். அப்போது சொகுசு காரில்  நீராவி முருகன் தப்பியோட முயன்றான். சினிமாவில் வருவதுபோல் போலீசார் வேனில் விரட்டிச்சென்று அவனது  காரை வழிமறித்ததும், காரிலிருந்து இறங்கி தப்பியோடினான். எஸ்ஐ  இசக்கிராஜா (32) விரட்டிப் பிடிக்கவே,  நீராவி முருகன் அரிவாளால் அவரை வெட்டினான்.

இதை தடுக்க முயன்ற காவலர்கள் சத்தியராஜ் (32), ஏகந்தக்குமார் (34), கலுங்குமணி (35), சேக் முபாரக் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து தற்காப்புக்காக எஸ்ஐ இசக்கிராஜா, துப்பாக்கியால்  நீராவி முருகன் மீது சுட்டார். இதில் அவன் சம்பவ இடத்திலேயே இறந்தான்.  நீராவி முருகன் அரிவாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்த எஸ்ஐ இசக்கிராஜா நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சம்பவ  இடத்தை நெல்லை சரக டிஐஜி பர்வேஷ்குமார், எஸ்.பி. சரணவன் ஆகியோர்  பார்வையிட்டனர்.

பின்னர் எஸ்.பி.சரவணன் அளித்த பேட்டி: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி நீராவி முருகன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட  60க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. தொடர்ந்து போலீசார் தேடி  வந்தனர். சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த கொள்ளை வழக்கு  தொடர்பாக, திண்டுக்கல் மாவட்ட போலீசாருக்கு களக்காடு பகுதியில் நீராவி முருகன்  பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, களக்காடு மங்கம்மாள் சாலையில்  நீராவி முருகனை சுற்றி வளைத்துள்ளனர்.

முருகன் போலீசாரை அரிவாளால் தாக்கியதால் எஸ்ஐ இசக்கி ராஜா கைத்துப்பாக்கியால் ஒரு ரவுண்ட் சுட்டதில் முருகன்  உயிரிழந்தான்.  அடுத்தடுத்து குற்ற வழக்குகளை செய்யக்கூடியவன்  நீராவி முருகன். குறிப்பாக பெண்களை கத்தியை காட்டி மிரட்டி அசால்ட்டாக  வழிப்பறி செய்தவன்.  ஒரு குற்ற வழக்கில் ஈடுபட்ட நிலையில்  அடுத்தடுத்து தொடர்ந்து நான்கைந்து குற்ற செயல்களை செய்யக்கூடியவன். காவல்  ஆய்வாளர்கள், போலீசாரை எளிதாக அசால்ட் செய்யக்கூடியவன் என்றார்.

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களை மட்டுமல்லாது சென்னையிலும் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நீராவிமுருகன் சுட்டுக் கொல்லப்பட்டது தமிழகம்  முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த போலீசாரை பாளை அரசு  மருத்துவமனையில் பார்த்து ஆறுதல் கூறிய தென்மண்டல ஐஜி அன்பு, ரவுடிகள் மீதான கைது நடவடிக்கை தொடரும் என ெதரிவித்தார்.

கசப்பாக மாறிய திருமண வாழ்க்கை: நீராவி முருகன் சிறு வயதில் இருந்தே குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், திருமண வாழ்க்கை அவனுக்கு கசப்பாக மாறிவிட்டது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நகைகளை கொள்ளையடித்த நீராவி முருகன் பணம், மற்றும் நகைகளுடன் ஆந்திராவில் சென்று பதுங்கிக் கொள்வானாம். அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் பிசியோதெரபி படித்த ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளான். பின்னர் நீராவி முருகனின் குற்ற நடவடிக்கைகளை பார்த்து அந்தப் பெண் அவனை விட்டு விலகி விட்டாராம்.

பல பெயர்களில் உலா: யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக தனது ஊரில் இருந்து வந்து சென்னையில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவர்களின் அறையில் போய் தங்குவதை நீராவி முருகன் வழக்கமாக வைத்துள்ளான். குகன், ஜோசப் என விதவிதமான பெயர்களையும் வைத்துக்கொண்டு நீராவி முருகன் சுற்றியுள்ளான்.

ரவுடிகளுக்கு சிம்ம சொப்பனமான எஸ்ஐ: நீராவி முருகனை என்கவுன்டர் செய்த சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா, ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்தார். அப்போது கோவில்பட்டி பகுதியில் பல்வேறு ரவுடிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். அப்பகுதியில் ரவுடிகள் அட்டகாசத்தை கட்டுப்படுத்தி நேரடியாக ரவுடிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிங்கம் படம், சூர்யா பாணியில் அவர்களுக்கு மிரட்டல் விடுத்து வந்தார். இதனால் சமூக வலைதளங்களில் புகழ்ந்து பேசப்பட்ட இசக்கிராஜா, போலீசாருக்கு பெரும் தலைவலியாக இருந்த பிரபல ரவுடி நீராவி முருகனை சுட்டு வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Niravi Murugan ,Nellai Kalakkadu , Attempt to attack police near Nellai Kalakkadu Famous Rowdy Niravi Murugan shot dead in encounter: 5 injured including SI in the attack
× RELATED நெல்லை களக்காடு தலையணை அருவியில் குளிக்கத் தடை விதித்தது வனத்துறை..!!