×

பாபர் - ரிஸ்வான் அசத்தல்: 2வது டெஸ்ட் டிரா

கராச்சி: கேப்டன் பாபர் ஆஸம் - முகமது ரிஸ்வான் ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியை பாகிஸ்தான் டிரா செய்தது. தேசிய ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்புக்கு 556 ரன் குவித்து டிக்ளேர் செய்ய, பாகிஸ்தான் 148 ரன்னுக்கு சுருண்டது. பாலோ ஆன் கொடுக்காமல் 2வது இன்னிங்சை விளையாடிய ஆஸி. 2 விக்கெட் இழப்புக்கு 97 ரன் என்ற ஸ்கோருடன் மீண்டும் டிக்ளேர் செய்தது.

இதைத் தொடர்ந்து, 506 ரன் எடுத்தால் வெற்றி என்ற மிகக் கடினமான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான், 4ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன் எடுத்திருந்தது. அப்துல்லா 71 ரன், பாபர் 102 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 228 ரன் சேர்த்து அசத்தியது. அப்துல்லா 96 ரன் எடுத்து வெளியேற, பவாத் ஆலம் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். பாபர் - ரிஸ்வான் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 115 ரன் சேர்த்தனர்.

பாபர் 196 ரன் (425 பந்து, 21 பவுண்டரி, 1 சிக்சர்), பாகீம் அஷ்ரப் 0, ஷாஜித் கான் 9 ரன் எடுத்து நாதன் லயன் சுழலில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க பரபரப்பு ஏற்பட்டது. ஆஸி. அணி வெற்றி முனைப்புடன் தாக்குதலை தீவிரப்படுத்தினாலும், ரிஸ்வான் - நவுமன் அலி இணை உறுதியுடன் விளையாடி போட்டியை டிரா செய்தது (பாகிஸ்தான் 171.4 ஓவரில் 443/7). ரிஸ்வான் 104 ரன் (177 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்), நவுமன் அலி (0, 18 பந்து) ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாபர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இரு அணிகளும் 0-0 என சமநிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி டெஸ்ட் லாகூரில் 21ம் தேதி தொடங்குகிறது.

Tags : Baber ,Riswan Asathal , Baber - Riswan Asathal: 2nd Test Draw
× RELATED கேப்டன் பாபர், மாலிக் அதிரடி அரை சதம்