×

உயிரை மாய்த்துக்கொண்டால் எந்த வாய்ப்பையும் அடைய முடியாது தற்கொலை என்பது சமுதாயத்திற்கு எதிரான குற்றம்: மாணவர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை

சென்னை: டிஜிபி சைலேந்திரபாபு முகநூலில் கூறியுள்ளதாவது: கல்லூரி மற்றும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களான நீங்கள் 18 வயதிற்கு உட்பட்டவர்களாகத்தான் இருப்பீர்கள். இன்னும் 60 முதல் 70 வருடங்கள் வாழ்வதற்கு நேரமிருக்கிறது. இந்த நேரம் உங்களுடைய மிகப்பெரிய சொத்து. பின்னடைவு, சிறிய தோல்வி, குறைவான மதிப்பெண் எடுத்துவிட்டோம், வகுப்பு தலைவராக உங்களை நியமிக்கவில்லை மற்றும் பள்ளி கூட தலைவராக உங்களை நியமிக்கவில்லை என்கிற இந்த சிறு சிறு காரணங்களுக்காக உங்களது உயிரை மாய்த்துக்கொள்ளலாமா, நம்மை நாமே கொலை செய்வது என்பது மிகக் கொடூரமான மற்றும் தவறான முடிவாகும்.

மாணவர்களாகிய நீங்கள் இந்த நாட்டின் சொத்து. தற்கொலை என்பது சமுதாயத்திற்கு எதிரான குற்றம். இந்த குற்றத்தை மாணவர்களாகிய நீங்கள் கண்டிப்பாக செய்யக்கூடாது. ஒரு நாட்டிற்கே முதல்வராகவோ, ஒரு அரசாங்கத்தின் தலைமை பொறுப்பான தலைமைச் செயலராகவோ, காவல்துறையின் தலைமை பொறுப்பிலோ, ஒரு விஞ்ஞானியாகவோ ஒரு மருத்துவமனை நிர்வகிக்கவோ அல்லது தலைமை பொறுப்பிற்கோ வருவதற்கு எவ்வளவோ வாய்ப்புகள் இருக்கிறது. இப்படிப்பட்ட எந்த வாய்ப்பையும் நமது உயிரை மாய்த்துக்கொண்டால் நம்மால் அடைய முடியாது.

மாணவர்களோ, உங்களின் பெற்றோர்கள் உங்களையே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களை வைத்துதான் அவர்களின் எதிர்காலம் இருக்கிறது என்று நினைக்கிறார்கள். நீங்கள் திடீரென்று உங்களின் உயிரை மாய்த்துக் கொண்டால் அவர்கள் படும் சிரமத்தை நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும். ஒருவேளை உங்களுக்கு தற்கொலை செய்துகொள்ளும் மனநிலை ஏற்படுமானால், உங்களின் அருகாமையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்களிடத்தில் தொலைபேசியின் மூலம் தொடர்புகொண்டு ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம்.

அதுமட்டுமில்லாமல் 1090 என்ற உதவி மையத்தை தொடர்பு கொண்டால் அங்கேயும் உங்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவார்கள். இதைவிட தற்கொலை தடுப்பு மையம் உதவி எண்ணான 915298 7821 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் மற்றும் icallhelpline.org என்ற இனையதள உதவியையும் நாடலாம். எனவே, மாணவர்களே உற்சாகமாக இருங்கள். வரபோகும் தேர்வுகளுக்கு உடனடியாக உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள். விரும்பி உங்களது பாடங்களை படியுங்கள். உங்களுக்கு படிப்பே சுகமானதாக இருக்கும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Tags : DGP ,Silenthrababu , Suicide is a crime against society: DGP Silenthrababu advises students
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்