×

வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமானது சாலிகிராமத்தில் ரூ.250 கோடி மதிப்புள்ள 5.5 ஏக்கர் நிலம் மீட்பு: 10 ஆண்டுகளுக்கு பிறகு அதிரடி நடவடிக்கை

சென்னை: சென்னை வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான சாலிகிராமத்தில் சுமார் 10 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.250 கோடி மதிப்புள்ள 5.5 ஏக்கர் நிலம் நேற்று அதிரடியாக மீட்கப்பட்டது. சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமாக சென்னை சாலிகிராமம் காந்தி நகரில் 5.5 ஏக்கர் நிலம் இருந்தது. இதன் மதிப்பு ரூ.250 கோடி. இந்த நிலத்தை ஆக்கிரமித்து சினிமா கேரவேன், டூரிஸ்ட் வேன் நிறுத்தப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாமல் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் அந்த இடம் திகழ்ந்து வந்தது. மேலும் அந்த வழியாக சென்ற பெண்களிடம் கேலி செய்வது போன்ற சம்பவங்களும் நடந்து வந்தது. இதனால், அந்த பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். சுமார் 10 ஆண்டுகளாக அந்த இடம் ஆக்கிரமிப்பு பிடியில் இருந்து வந்தது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் எந்த பயனும் இல்லை. இந்த நிலையில் புதியதாக திமுக ஆட்சி அமைந்தவுடன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை மீட்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் அந்த தொகுதி எம்எல்ஏ மற்றும் திமுகவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பை மீட்கும் பணியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டது. இதைத் தொடர்ந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு நேற்று அந்த இடத்தை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். தொடர்ந்து அங்கிருந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும், அமைச்சர் பி.கே.சேகர் பாபு, ஆணையர் குமரகுருபரன், எம்எல்ஏக்கள் ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, ஜெ.கருணாநிதி ஆகியோர் முன்னிலையில் நேற்று அகற்றப்பட்டது. அப்போது மேலும் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அத்துமீறி நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறநிலையத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு பிறகு விடிவு காலம் பிறந்துள்ளதால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.* 100 நாளில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம்: அமைச்சர் பேட்டிஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை 100 நாளில் செயல்படுத்துவோம் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு  கூறியுள்ளார். சென்னை வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான சாலிகிராமம் காந்திநகரில் இருந்த ரூ.250 கோடி மதிப்பிலான 5.5 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலம் தற்போது  மீட்கப்பட்டுள்ளது. இதை நேற்று ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத்துறை பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: மீட்கப்பட்ட நிலமானது அடித்தட்டு, ஏழை, எளிய மக்களுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார். எனவே, கலந்தாலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும். இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சொத்துக்களை யார் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும் மீட்போம்.  மயிலாப்பூரில் ேகாயில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை 100 நாளில் செயல்படுத்துவோம். தமிழ்நாட்டில் பாஜ தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பல்வேறு பிரச்னைகளை மேற்கொண்டு வருகிறது. திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அரசுக்கு இணக்கமானவர்களுக்கு பதவிகள் வழங்கப்படவில்லை. குறை கூறுபவர்கள் கூறிகொண்டே தான் இருப்பார்கள். அவர்களின் ஏச்சுகளுக்கும், பேச்சுகளுக்கும் செவி சாய்த்தால் வளர்ச்சி பணிகளில் ஈடுபட முடியாது. விமர்சனங்கள் ஆக்கப்பூர்வமாக இருந்தால் அரசு அதை முழுமையாக ஏற்கும். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அதை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டால் அவர்கள் மீது நிச்சயமாக அரசு நடவடிக்கை எடுக்கும். எதிர்கருத்துகள் இருப்பவர்கள் பாராட்டும் அளவில் திமுக அரசின் செயல்பாடுகள் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்….

The post வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமானது சாலிகிராமத்தில் ரூ.250 கோடி மதிப்புள்ள 5.5 ஏக்கர் நிலம் மீட்பு: 10 ஆண்டுகளுக்கு பிறகு அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Vadapalani ,Murugan Temple ,Saligiram ,Chennai ,Vadapalani Murugan Temple ,Saligiramam ,
× RELATED கோடம்பாக்கம் பிரதான சாலையில் திடீர் பள்ளம்!!