மதுராந்தகம் அருகே அதிகாலை பரபரப்பு டாஸ்மாக்கில் கொள்ளையை தடுத்த 2 போலீசார் மீது சரமாரி தாக்குதல்

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே டாஸ்மாக்கில் கொள்ளையை தடுத்த போலீஸ்காரர்களை கட்டையால் சரமாரி தாக்கிவிட்டு மர்ம கும்பல் தப்பியது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கீழவளம் கிராமத்தில் ஒதுக்குப்புறமாக டாஸ்மாக் கடை உள்ளது. இந்த பகுதியில் உள்ள சாலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில், போலீஸ்காரர்கள் ராஜேஷ், சதீஷ்குமார் ஆகியோர் பைக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் கடையில் ஷட்டர் உடைக்கப்படும் சத்தம் கேட்டதால் போலீஸ்காரர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் இரும்பு கம்பி மூலம் டாஸ்மாக் ஷட்டரை உடைத்துக்கொண்டிருந்தனர்.

 அவர்களை பிடிக்க போலீஸ்காரர்கள் சென்றபோது மர்ம கும்பல், போலீசாரை சுற்றிவளைத்தனர். பின்னர் தாங்கள் வைத்திருந்த கட்டையாலும் கைகளாலும் இரண்டு போலீஸ்காரர்களையும் சரமாரியாக தாக்கிவிட்டு ஓடிவிட்டனர். இதில் கழுத்து, கை, கால்களில் பலத்த காயம் அடைந்த போலீஸ்காரர்கள் வலியால் துடித்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் விரைந்துவந்தார். காயம் அடைந்த போலீஸ்காரர்களை மீட்டு உடனடியாக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே போலீஸ்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய கொள்ளை கும்பல், தாங்கள் கொண்டுவந்திருந்த கட்டிங் மெஷின், இரும்பு ராடு மற்றும் இரண்டு பைக்குகளை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர். அவற்றை கைப்பற்றிய போலீசார், மர்ம கும்பலை பற்றி விசாரிக்கின்றனர்.

Related Stories: