
ஆலங்குடி : ஆலங்குடி அருகே உள்ள வம்பன் வீரமாகாளியம்மன் கோயில் பங்குனி தேர் திருவிழாவையொட்டி 64ம் ஆண்டு குதிரை மற்றும் மாட்டு வண்டி பந்தயம் நேற்று நடைபெற்றது.
இதில், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, பெரிய மாடு, நடு மாடு, சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் மொத்தம் 33 மாட்டு வண்டிகளும், சிறிய, பெரிய குதிரை பந்தயத்தில் மொத்தம் 24 வண்டிகளுடன் பந்தய வீரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
ஆலங்குடியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயத்திற்கு எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு பந்தயம் நடந்தது. இதில் முதல் மூன்று இடங்களில் வெற்றிபெற்ற மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தய வீரர்கள் மற்றும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசு, ஆறுதல் பரிசு என பல்வேறு வகையான பரிசுகள் கமிட்டியினர் சார்பில் வழங்கப்பட்டது.