×

சேலம் அருகே வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு-தடபுடல் விருந்துடன் சீர்வரிசை கொடுத்து அமர்க்களம்

சேலம் : சேலம் அருகே வளர்ப்பு நாய்க்கு, அதன் உரிமையாளர் வளைகாப்பு நடத்தி உறவினர்களுக்கு விருந்து வைத்த நிகழ்வு வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக குடும்பங்களில் பெண் குழந்தை பிறந்தது முதல், மஞ்சள் நீராட்டு விழா, திருமணம், வளைகாப்பு என ஒவ்வொரு பருவத்திலும் பெண்மையை போற்றும் வகையிலான நிகழ்ச்சிகளை நடத்தி, பெற்றோர்கள் உற்சாகமடைவார்கள். ஆனால், வீட்டில் வளர்த்து வரும் செல்லப்பிராணியான நாய்களுக்கு சிறப்பாக வளைகாப்பு விழாவை நடத்தி, கவனம் ஈர்த்துள்ளார், சேலத்தை சேர்ந்த புகைப்பட கலைஞர்.

சேலம் மாவட்டம் மேச்சேரி இந்திரா நகரைச் சேர்ந்தவர் நடராஜன். புகைப்பட கலைஞரான இவரது மனைவி சுசீலா. இவர்களது வீட்டில், 20 மாதங்களாக ‘ஹைடி’ என்ற ஆண் பொமேரியன் நாயும், 9 மாத ‘சாரா’ என்ற பெண் பொமேரியன் வகை நாயும் வளர்ந்து வருகிறது. இந்நிலையில், சாரா கர்ப்பம் தரித்தது. இதனையடுத்து, வீட்டில் ஒரு உறுப்பினராக வளர்ந்து வரும் சாராவிற்கு, பெண்களுக்கு நடத்தப்படுவதை போலவே வளைகாப்பு நடத்த வேண்டும் என, சென்னையில் படித்து வரும் மகள் ஹேமஹரிணி ஆசைப்பட்டார். இதற்கு அவர்களது பெற்றோரும் சம்மதம் தெரிவிக்கவே, கடந்த 13ம் தேதி வளைகாப்பு விழா கோலாகலமாக நடந்தது.

இதற்கென தனியாக பத்திரிகை அச்சடித்து, உறவினர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர், தனித்தனி சேர்களில் இரு நாய்களையும் அமர வைத்து, மஞ்சள், குங்குமமிட்டு, சாராவிற்கு வளையலை மாட்டினர். தொடர்ந்து விழாவிற்கு வந்தவர்களுக்கு இனிப்பு, பஜ்ஜி மற்றும் 5 வகையான அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. அத்துடன், சாராவிற்கு வளையல் மாட்டிய சுமார் 30 பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, தட்டு, கண்ணாடி, சீப்பு, தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம் ஆகியவை அடங்கிய சீர்வரிசையும் வழங்கப்பட்டது. இதுபற்றிய வீடியோ சமுக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இதுகுறித்து நடராஜன் கூறுகையில், ‘‘கொரோனா காலத்தில் மிகுந்த சிரமங்களுக்கு இடையே இவற்றை வாங்கி வந்தேன். இதன் காரணமாக, இரு நாய்களையும் எனது மகள் மிகுந்த அன்புடன், பரிவு காட்டி வளர்த்து வந்தார். கடந்த 3 மாதத்திற்கு முன்பு, சாரா-விற்கு மஞ்சள் நீராட்டு விழாவை நடத்தினோம். தற்போது, கர்ப்பமடைந்து 60 நாட்களை கடந்ததால், வளைகாப்பு விழா நடத்தியுள்ளோம். எனது முயற்சிக்கு உறவினர்களும் ஆதரவு தெரிவித்து, விழாவில் கலந்து கொண்டனர். அடுத்த 20 நாட்களில் குட்டியை ஈன்றெடுக்கும் என எதிர்பார்க்கிறோம்,’’ என்றார்.

Tags : Amarakkalam ,Salem , Salem: A pet dog near Salem, whose owner hosted a baby shower and entertained relatives, has gone viral on websites.
× RELATED சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர்...