×

விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயில் மாசி பிரம்மோற்சவ விழா மாடவீதிகளில் அலங்கார தேரில் உலா வந்த மார்க்கபந்தீஸ்வரர்-வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

வேலூர் : வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயில் மாசி பிரம்மோற்சவ விழாவில் நேற்று மாடவீதிகளில் மரகதாம்பிகை சமேத மார்க்கபந்தீஸ்வரர் உற்சவ மூர்த்திகள் தேரில் உலா வந்து அருள்பாலித்தனர்.தனது சாபம் நீங்க இத்தலத்தில் அவதரித்த பிரம்மனுக்கு தலைசாய்த்து அருள்பாலித்த பெருமை கொண்ட, வழிதவறிய வணிகனுக்கு வழியை காட்டியதுடன், துணையாகவும் வந்து அருள்பாலித்த விரிஞ்சிபுரம் மரகதாம்பிகை சமேத மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோயில் பாடல்பெற்ற தொண்டை நாட்டு திருத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

கார்த்திகை கடைஞாயிறு விழாவில் இக்கோயில் சிம்மதீர்த்தம், பிரம்மதீர்த்தம், பாலாறு ஆகியவற்றில் மூழ்கி இத்தல இறைவனிடம் வேண்டும் பெண்களுக்கு குழந்தை வரம் அருளும் சிறப்பு மிக்க தலமான இங்கு மாசி மாத பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடத்தப்படுகிறது. இவ்விழாவின் 8ம் நாளான நேற்று மரகதாம்பிகை சமேத மார்க்கபந்தீஸ்வரர் நான்கு மாட வீதிகளில் தேரில் உலா வந்தார். இத்தேரை ஏராளமான பெண்கள் வடம் பிடித்து இழுத்து வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

தேர் வீதியுலாவை காண வேலூர் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் விஜயா, செயல் அலுவலர்கள் சாமிதுரை, சசிகுமார், ஆய்வர் சுரேஷ்குமார், ஊராட்சி மன்ற தலைவர் குணசுந்தரிபாலு, தேர் உற்சவ கமிட்டி நிர்வாகிகள் கணேசன், வெங்கடேசன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.



Tags : Markabandheeswarar ,Temple ,Virinjipuram ,Masi Brahmorsava Festival , Vellore: Vellore District Virinjipuram Markabandheeswarar Temple Mass Celebration Ceremony
× RELATED கோடை விடுமுறை எதிரொலியாக மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்