களக்காடு அருகே பிரபல ரவுடி நீராவி முருகன் என்கவுன்டர்: எஸ்.ஐ. இசக்கிராஜா தலைமையிலான தனிப்படை அதிரடி

நெல்லை: நெல்லை மாவட்டம் களக்காடு அருகே மீனவன்குளம் என்ற இடத்தில் பிரபல ரவுடி நீராவி முருகன் போலீஸ் என்கவுன்டரில்  சுட்டுக் கொல்லப்பட்டார். பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி நீராவி முருகனை, திண்டுக்கல் தனிப்படை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்தனர். தூத்துக்குடியை சேர்ந்த நீராவி முருகன் மீது கடத்தல் உள்பட 80-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தூத்துக்குடியில் உள்ள புதியம்பத்தூர் பகுதியில் உள்ள நீராவி என்ற தெருவில் வசித்து வந்ததால், ரவுடி முருகன்  நீராவி முருகன் என அழைக்கப்பட்டு வந்துள்ளார். ரவுடி நீராவி முருகனை கைது செய்ய முயன்ற போது போலீசாரை தாக்கியதால், தற்காப்புக்காக என்கவுன்டர் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை, கொள்ளை வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்ட ரவுடி முருகனை தனிப்படை அமைத்து போலீஸ் தேடி வந்தது. சென்னையில் பெண்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஜாமினில் முருகன் வெளியே வந்தார். கொள்ளை வழக்குகளில் நீராவி முருகனை தேடி திண்டுக்கல் மாவட்டம் தனிப்படை போலீஸ் நெல்லை சென்றிருந்தது. ரவுடி நீராவி முருகனை பிடிக்க முயன்ற போது பழனி எஸ்.ஐ  இசக்கிராஜா உட்பட 3 காவல்களுக்கு அரிவாள் வெட்டு என போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழனி காவல் உதவி ஆய்வாளர் இசக்கிராஜா தலைமையிலான தனிப்படை தேடுதலில் ஈடுபட்டபோது என்கவுன்டர் செய்யப்பட்டது.

Related Stories: