×

பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் நம்பர் 1 மெட்வதேவ் அதிர்ச்சி தோல்வி: 4வது சுற்றில் லெய்லா

இண்டியன் வெல்ஸ்: அமெரிக்காவில் நடைபெறும் பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட, கனடா வீராங்கனை லெய்லா பெர்னாண்டஸ் தகுதி பெற்றார்.
3வது சுற்றில் அமெரிக்காவின் ஷெல்பி ரோஜர்சுடன் மோதிய லெய்லா 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 1 மணி, 39 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு 3வது சுற்றில் நடப்பு சாம்பியன் பவுலா படோசா (ஸ்பெயின்) 7-6 (7-4), 6-1 என்ற நேர் செட்களில் சக வீராங்கனை சொரிபிஸ் டொர்மோவை வீழ்த்தினார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் லெய்லா - பவுலா மோதுகின்றனர்.

பெலாரஸ் நட்சத்திரம் விக்டோரியா அசரெங்கா தனது 3வது சுற்றில் 3-6, 4-6 என்ற நேர் செட்களில் எலனா ரிபாகினாவிடம் (கஜகஸ்தான்) போராடி தோற்றார். எஸ்டோனியாவின் அனெட் கோன்டவெய்ட் 6-3, 5-7, 6-7 (5-7) என்ற செட் கணக்கில் செக் குடியரசின் மார்கெடா வோண்ட்ருசோவாவிடம் வீழ்ந்தார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 2 மணி, 50 நிமிடத்துக்கு நீடித்தது. கிரீஸ் வீராங்கனை மரியா சாக்கரி 6-3, 6-0 என்ற நேர் செட்களில் செக் குடியரசின் பெத்ரா குவித்தோவாவை மிக எளிதாக வீழ்த்தினார்.

மான்பில்ஸ் அசத்தல்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் நம்பர் 1 வீரர் டானில் மெத்வதேவுடன் (26 வயது, ரஷ்யா) மோதிய ஜேல் மான்பில்ஸ் (35 வயது, பிரான்ஸ்) 4-6, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு 3வது சுற்றில் அமெரிக்காவின் ஜென்சன் புரூக்ஸ்பியுடன் (43வது ரேங்க்) மோதிய ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (5வது ரேங்க், கிரீஸ்) 6-1, 3-6, 2-6 என்ற செட் கணக்கில் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். முன்னணி வீரர்கள் ரபேல் நடால் (ஸ்பெயின்), நிக் கிரிஜியோஸ் (ஆஸி.), யானிக் சின்னர் (இத்தாலி), கேமரான் நோரி (இங்கிலாந்து), கார்லோஸ் அல்கராஸ் (ஸ்பெயின்) ஆகியோரும் 4வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.


Tags : BNP Bariba Open Tennis No. ,Medvedev ,Leila , BNP Bariba Open Tennis No. 1 Medvedev shock defeat: Leila in 4th round
× RELATED அல்கராஸ் மீண்டும் சாம்பியன்