×

ஆஸ்திரேலியாவுடன் 2வது டெஸ்ட் போராடுகிறது பாகிஸ்தான்

கராச்சி: ஆஸ்திரேலிய அணியுடனான 2வது டெஸ்டில், 506 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, அப்துல்லா ஷபிக் - கேப்டன் பாபர் ஆஸம் ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன் எடுத்துள்ளது. தேசிய ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 556 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. கவாஜா 160, ஸ்மித் 72, அலெக்ஸ் 93 ரன் விளாசினர். ஆஸி. பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 148 ரன்னுக்கு சுருண்டது. பாலோ ஆன் கொடுக்காமல் 2வது இன்னிங்சை விளையாடிய ஆஸி. 2 விக்கெட் இழப்புக்கு 97 ரன் என்ற ஸ்கோருடன் மீண்டும் டிக்ளேர் செய்தது.

இதைத் தொடர்ந்து, 506 ரன் எடுத்தால் வெற்றி என்ற மிகக் கடினமான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான், 21 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது. இமாம் உல் ஹக் 1, அஸார் அலி 6 ரன்னில் வெளியேறினர். இந்த நிலையில், அப்துல்லா ஷபிக் - பாபர் ஆஸம் இணைந்து பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். 4ம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன் எடுத்துள்ளது. அப்துல்லா 71 ரன், பாபர் 102 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 8 விக்கெட் இருக்க, பாக். வெற்றிக்கு இன்னும் 314 ரன் தேவை என்ற நிலையில் இன்று பரபரப்பான கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

Tags : Pakistan ,Australia , Pakistan fights 2nd Test against Australia
× RELATED பாகிஸ்தானில் பயங்கரம் தற்கொலை படை தாக்குதல் 5 சீன பொறியாளர்கள் பலி