ஊத்துக்கோட்டையில் புதர்மண்டி கிடக்கும் ஏரி கால்வாய்: சீரமைக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் புதர் மண்டிக்கிடக்கும் ஏரி கால்வாயை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 914 ஏக்கர்  கொண்ட ஈசா ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு மழை காலங்களில் ஆந்திர மாநிலம் நந்தனம் மலைப்பகுதியில் இருந்து வரும் மழை நீர் சுருட்டபள்ளி அணைக்கட்டிற்கு வந்து அங்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு பின்னர் அங்குள்ள ஏரிக்கால்வாய் வழியாக ஊத்துகோட்டை ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படும்.

இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பியதும், இங்கிருந்து  தாராட்சி, பேரண்டூர், பாலவாக்கம், சிங்கிலிகுப்பம், செஞ்சியகரம், முக்கரம்பாக்கம் உட்பட 14 ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த தண்ணீர் அனைத்தும் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இது விவசாயிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாகும். இந்நிலையில், ஈசா ஏரியில் இருந்து அம்பேத்கர் நகர் பகுதிக்கு விவசாயத்திற்கு செல்லும் ஏரிக்கால்வாய் தற்போது புதர்கள் மண்டி வரப்பு கால்வாயாக மாறியுள்ளது. இந்த கால்வாயை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

* 20 அடி கால்வாய் 2 அடியானது

அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘ஊத்துக்கோட்டை ஈசா ஏரியில் இருந்து அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு செல்லும் ஏரி கால்வாய் சுமார் 20 அடி அகலம் கொண்டது. தற்போது, இந்த கால்வாயில் புதர்கள் மண்டி 2 அடி வரப்பு கால்வாய்போல் மாறிவிட்டது. இந்த கால்வாயை சீரமைக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: