×

திருமழிசை, மீஞ்சூரில் தேர் திருவிழா கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருவள்ளூர்:  திருமழிசையில் உள்ள குளிர்ந்த நாயகி உடனுறை ஒத்தாண்டேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரதிருவிழா கடந்த 9ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி விநாயகர் உற்சவத்துடன் துவங்கி தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த 13ம் தேதி அதிகார நந்தி சேவையும், ரிஷப வாகன உற்சவமும் நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை உற்சவர் ஒத்தாண்டேஸ்வரர் திருத்தேரில் எழுந்தருளி நகர்வலம் வந்தார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம்பிடித்து திருத்தேரை இழுத்து சென்றனர். வழிநெடுகிலும் பக்தர்கள் தேங்காய், பழம் படைத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து, நேற்று மாலை சுவாமி வசந்த மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், இரவு வசந்த மண்டபத்தில் இருந்து கோயிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பொன்னேரி: மீஞ்சூரில் உள்ள வடகாஞ்சி என அழைக்கப்படும் பழமைவாய்ந்த ஸ்ரீகாமாட்சி அம்பிகை - ஸ்ரீஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவம் கடந்த 9ம் தேதி தொடங்கியது. 2ம் நாள் சூரிய சந்திர பிரபை, 3ம் நாள் பூதவாகனம், 4ம் நாள் நாக வாகனம், 5ம் நாள் மாவடி சேவை, 6ம் நாள் அம்பாள் பஞ்சமூர்த்தி புறப்பாடு ஆகியவை நடைபெற்றது.

தொடர்ந்து 7ம் நாளான நேற்று காலை தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மீஞ்சூரில் உள்ள முக்கிய மாடவீதிகளில் 47 அடி உயரமுள்ள தேரை பக்தர்கள் ‘ஓம் நமச்சிவாய’ என கோஷமிட்டு வடம் பிடித்து இழுத்தனர். இத்தேரில் சிவனும் மறுபுறத்தில் பெருமாளும் வடிவமைக்கப்பட்டு பங்குனி உத்திர பிரமோற்சவத்தில் சிவனும், சித்திரை மாத பிரமோற்சவத்தில் பெருமாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பது தமிழகத்திலேயே தனிச்சிறப்பாகும்.

தேர் திருவிழாவை தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும். பங்குனி உத்திர பிரமோற்சவத்தில் 8வது நாள் முருகர் புறப்பாடு மற்றும் குதிரை வாகனம், பல்லக்கு, நடராஜர் புறப்பாடு என கடைசி நாளான 22ம் தேதி உற்சவ சாந்தி, 108 சங்காபிஷேகம் மற்றும் ஊஞ்சல் சேவை மற்றும் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. மேலும் இத்தேரானது சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டது. தேர் திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags : Chariot Festival ,Thirumalisai , Chariot Festival riot in Thirumalisai, Minjur: Crowds of devotees participate
× RELATED கண்டாச்சிபுரம் அருகே திரவுபதி அம்மன்...