×

எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் மீண்டும் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்துவதா? ஓபிஎஸ், இபிஎஸ் கண்டனம்

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் மீண்டும் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்துவதற்கு ஓபிஎஸ், இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், அதிமுக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி, மக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்தோடு வேலுமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டது. மீண்டும் வேலுமணியை குறிவைத்தும், சிங்காநல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஜெயராம் உள்ளிட்டோரை குறிவைத்தும் பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கிறது. இந்த அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டத்தில் வேலுமணி துடிப்புடன் செயல்பட்டு கழக பணிகள் ஆற்றியதை பொறுத்துக்கொள்ள இயலாமல் தற்போது அவர் மீது குறிவைத்து தாக்கப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல்களில் தீவிரமாக செயல்பட்ட வேலுமணியை முடக்கி போடவே அவர் மீதும், அவர் தொடர்புடைய இடங்களிலும் இன்று லஞ்ச ஒழிப்பு துறையின் சோதனைகள் நடத்தப்படுகிறது.

வேலுமணி ஆயிரம் சோதனைகள் வந்தபோதும், அதனை எதிர்த்து நிற்கும் ஆற்றல் கொண்டவர். அதிமுக உறுதிமிக்க தொண்டர்களில் ஒருவரான வேலுமணி, திமுக அரசின் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளால் சிறிதும் தொய்வடைந்துவிடமாட்டார். அவருடைய கட்சி பணிகளும், மக்கள் தொண்டும் தொய்வில்லாமல் தொடரும் என்பதை அதிமுக தொண்டர்களும், கோவை மாவட்ட மக்களும் நன்கு அறிவார்கள். அதிமுக சோதனைகள் அனைத்தையும் வென்று, தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறது, இனியும் விளங்கும் என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Tags : Anti-Corruption Department ,SB ,EPS , Will the Anti-Corruption Department conduct re-inspections at places related to SB Velumani? Condemnation of OBS, EPS
× RELATED சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர்...