மாணவன் நாவரசு கொலை வழக்கில் இரட்டை ஆயுள் பெற்ற ஜான் டேவிட் முன்கூட்டியே விடுதலை கோரிய மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை:  மருத்துவக் கல்லூரி மாணவன் நாவரசு கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுவிக்க கோரி அவரது தாய் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொன்னுசாமி மகன் நாவரசு (17). கடந்த 1996ம் ஆண்டு கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக் கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த நாவரசு, அதே ஆண்டு நவம்பர் 6ம் தேதி, வகுப்பிற்கு சென்றவர் விடுதிக்கு திரும்பவில்லை.

நவம்பர் 7ம் தேதி, சென்னையில் மாநகர பஸ் ஒன்றில் கேட்பாரற்று கிடந்த சூட்கேசில், தலை, கை, கால்கள் வெட்டி எடுக்கப்பட்ட ஆண் உடல் மட்டும் கிடந்தது. இந்த வழக்கில் நாவரசுவை கொலை செய்த ஜான்டேவிட் கோர்ட்டில் சரணடைந்தார். இந்த வழக்கை விசாரித்த கடலூர் செஷன்ஸ் நீதிமன்றம் 1998, மார்ச் 11ம் தேதி, ராகிங் காரணமாக நாவரசுவை கொடூரமான முறையில் கொலை செய்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனையும், கொலை செய்த தடயங்களை மறைத்ததற்காக மற்றொரு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பளித்தனர். மேலும், இரட்டை ஆயுள் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்குமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவில் கூறியிருந்தது.

இந்நிலையில், தற்போது புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி அவரது தாய் எஸ்தர் தமிழக அரசிடம் முறையிட்டார். இந்த மனு நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து எஸ்தர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடும்போது, தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜான் டேவிட்டுக்கு சிறை நிர்வாகம் நற்சான்றிதழ் தந்துள்ளது. தர்மபுரி பஸ் எரிப்பு, மேல வளவு போன்ற கொடூர குற்ற வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், ஜான் டேவிட்டுக்கு மட்டும் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது என்றார்.

அதற்கு அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா வாதிடும்போது, முன்கூட்டியே விடுதலை என்பதை உரிமையாக கோர முடியாது. இது அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. மற்றவர்களை விடுதலை செய்துள்ளதால் அதே வாய்ப்பை தனக்கும் வழங்க வேண்டும் என்று கோர முடியாது என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசின் உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories: