×

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாததால் சிஎம்டிஏ உறுப்பினர் செயலருக்கு வாரன்ட்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாததால் சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரன்ட் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தை சர்வதேச தரத்துக்கு விரிவாக்கத்துக்காக, விமான நிலையத்தின் அருகில் உள்ள மணப்பாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம் மற்றும் தாரப்பாக்கம் பகுதி குடியிருப்பு பகுதி நிலங்களை, நிறுவன ரீதியான பகுதியாக அறிவித்தது.  நில உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், நிலம் கையகப்படுத்தும் முடிவை கைவிடுவதாக அறிவித்ததை அடுத்து, தாரப்பாக்கம் பகுதியை குடியிருப்பு பகுதியாக மீண்டும் வகை மாற்றம் செய்ய கோரி இவிபி டவுன்சிப்பை சேர்ந்த கிரீஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.  

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நிலத்தை வகைமாற்றம் செய்வது தொடர்பாக தொழில்நுட்ப குழு அளித்த பரிந்துரை மீது 4 மாதங்களில் முடிவெடுக்குமாறு சி.எம்.டி.ஏவிற்கு 2020ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவு குறிப்பிட்ட காலத்தில் அமல்படுத்தப்படாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது.  இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது அதுல்ய மிஸ்ரா ஆஜராகவில்லை.  இதையடுத்து, அன்சுல் மிஸ்ராவை ஆஜர்படுத்தும் வகையில் அவருக்கு எதிராக ஜாமீனில் விடுதலை செய்யக் கூடிய வாரன்ட்டை பிறப்பித்து சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை மார்ச் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


Tags : Chennai High Court ,CMDA , Chennai High Court issues warrant to CMDA member secretary for non-appearance in contempt of court case
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...