×

ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயிலில் வைணவ சான்றிதழ் படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்; அறநிலையத்துறை தகவல்

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயிலில் வைணவ சான்றிதழ் படிப்புக்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது  இந்து சமய அறநிலையத்துறையின் ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் மேம்படுத்தப்படும் என்று  அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயிலில் வைணவ (வைகானசம்) ஓராண்டு சான்றிதழ் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. விண்ணப்பதாரர்கள் இந்துக்களாக இருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.1.2022 அன்று 14 வயது நிரம்பியவராகவும், 24 வயதுக்கு உட்பட்டவராகவும், இந்து வைணவ கோட்பாடுகளை கடைபிடிப்பவர்களாகவும் இருத்தல் வேண்டும். பயிற்சி பெறும் மாணவர்கள் பயிற்சி நிலைய வளாகத்திலேயே தங்கி பயில வேண்டும். பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவருக்கு இலவசமாக உணவு, சீருடை, உறைவிடம், பயிற்சி காலத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம்  உதவித் தொகை ஆகியவை வழங்கப்படும்.

இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்கள் விண்ணப்ப படிவங்களை www.hrce.tn.gov.in என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி செயல் அலுவலர்,  ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயில், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் மாவட்டம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 12.4.2022. இந்த வைணவ பயிற்சி வகுப்புகளில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Sriperumbudur Adigesava Perumal ,Bashyakara Swamy Temple , Students can apply for Vaishnava Certificate Course at Sriperumbudur Adigesava Perumal and Bashyakara Swamy Temple; Charitable Department Information
× RELATED ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள்...