×

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்பு.! தமிழகத்தில் இயல்பை விட வெப்பநிலை 3 டிகிரி அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் இயல்பை விட வெப்பநிலை இன்று 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் வங்கக்கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் விஞ்ஞானி கீதா கூறியதாவது: பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

18, 19ம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும். இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு (இன்று, நாளை) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழ்த்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இன்று பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Bay of Bengal ,Tamil Nadu ,Meteorological Department , Depression in the Bay of Bengal is likely to form today! Temperature to rise 3 degrees above normal in Tamil Nadu: Meteorological Department
× RELATED அரிச்சல்முனைக்கு வரும் சுற்றுலா...