×

202 கிளை ஆறுகள், 667 சுத்திகரிப்பு நிலையங்களுடன் காவிரி உட்பட 13 ஆறுகளை பாதுகாக்க ரூ20,000 கோடி: ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் திட்ட அறிக்கை வெளியீடு

புதுடெல்லி: நாடு முழுவதும் 202 கிளை ஆறுகள், 667 சுத்திகரிப்பு நிலையங்களுடன் காவிரி உட்பட 13 ஆறுகளை பாதுகாக்க ரூ20,000 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தெரிவித்தார். ஒன்றிய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ்,  காவிரி உள்ளிட்ட 13 ஆறுகளை பாதுகாப்பது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை நிகழ்ச்சி ஒன்றில் வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘நாடு முழுவதும் 13 முக்கிய ஆறுகளுடன், கிளை நதிகளான சுமார் 202 ஆறுகளையும் பாதுகாப்பது தொடர்பான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. துணை ஆறுகளை பாதுகாக்காமல் இந்த திட்டப்பணிகளை வெற்றியடைய முடியாது.

ஜீலம், சட்லஜ், செனாவ், ரவி, பியாஸ்,  யமுனா, பிரம்மபுத்ரா, லூனி, நர்மதா, கோதாவரி, மகாநதி, கிருஷ்ணா, காவேரி ஆகிய 13 முக்கிய ஆறுகளை பாதுகாக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு  ஆறுக்கும் அதன் பரப்பிற்கு ஏற்றவாறு தனித்தனி பாதுகாப்புத் திட்டங்கள்  வகுக்கப்பட்டுள்ளன. 13 ஆறுகளுக்கு இடையே 667 சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் தோட்ட மாதிரிகள் அமைக்க முன்மொழியப்பட்டுள்ளன. இத்திட்டமானது நர்மதாவில் இருந்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. கங்கையை சுத்தப்படுத்தும் திட்டம் ஆரம்ப வெற்றியடைந்ததால், யமுனா, நர்மதா, ஜீலம் உட்பட நாட்டின் 13 முக்கிய ஆறுகளை பாதுகாக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

24 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்கள் வழியாக பாயும் இந்த ஆறுகளை பாதுகாப்பதற்காக வரும் ஆண்டுகளில் சுமார் 20,000 கோடி ரூபாய் செலவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு திட்டத்தையும் மாநில அரசுகள் செயல்படுத்தும்; ஒன்றிய அரசு திட்ட செயல்பாட்டினை கண்காணிக்கும். இத்திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், எதிர்கால சவால்களைச் சமாளிப்பது உட்பட, கேப்-26ல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்படும். கார்பன் உமிழ்வை வரும் 2030ம் ஆண்டுக்குள் 1 பில்லியன் டன்கள் குறைக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன்படி, சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய திட்டத்தின்படி 13 ஆறுகளின் இருபுறமும் தோட்டங்கள் அமைக்கப்படும். இதன் மூலம் 7,417 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் காடுகளின் பரப்பை அதிகரிக்க முடியும். அடுத்த 10 ஆண்டுகளில், சுமார் 50.21 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுவதற்கு இத்திட்டம் உதவும். மேலும் ஆண்டுக்கு 1,887 கன மீட்டர் மற்றும் 64,000 சதுர மீட்டர் நிலத்தடி நீர் ரீசார்ஜ் மற்றும் 64,000 சதுர மீட்டர் மண் அரிப்பை ஒவ்வொரு ஆண்டும் குறைக்கும்’ என்றார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் அஸ்வினி சவுபே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Cauvery ,Union Environment Ministry , Rs 20,000 crore to protect 13 rivers, including Cauvery, with 202 tributaries and 667 treatment plants: Union Environment Ministry releases project report
× RELATED காவிரி மேலாண்மை ஆணையம் ஏப்ரல் 4-ம் தேதி கூடுகிறது