×

வகுப்பறைக்குள் வனக்காடு

நன்றி குங்குமம் தோழி

‘‘கல்வி, குழந்தைகளை எங்களிடமிருந்து பிரித்துவிடுகிறது. அவர்கள் எங்கள் கலாச்சாரத்தையும் அடையாளங்களையும் அவமானமாக நினைக்க ஆரம்பிக்கிறார்கள்” என்ற கவலைதான் பழங்குடிகளுக்குக் கல்வி கற்பதிலிருந்த பெரும் தயக்கம். ஆனாலும் அவர்கள் குழந்தைகளை பள்ளிக்கு போகக் கூடாது என என்றுமே தடுத்தது கிடையாது. குழந்தைகளாகவே மொழி, கலாச்சாரம் போன்ற தடைகளால் கல்வியைத் தொடர முடியாமல், கற்பதை கைவிட்டனர்.

தமிழ்நாட்டில் மலைகளுக்கு ராணியாக, இயற்கை அழகு கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் பனியர், இருளர், குரும்பர், காட்டு நாயக்கர் என பூர்வக்குடி மலைவாழ் மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். அதில் பலரும் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள்தான். அங்கு இயங்கிவரும் ஆதிவாசி முன்னேற்றச் சங்கம், கல்வி அறிவு மூலம்தான் தங்களுக்கான உரிமைகளைப் பெற முடியும் என்பதை உணர்ந்து, 1993ல் கூடலூரில் வித்யோதயா ஆதிவாசி பள்ளியை, விஸ்வ பாரதி வித்யோதயா அறக்கட்டளை மூலம் உருவாக்கினர்.

இப்பள்ளி ஐந்தாம் வகுப்பு வரை செயல்படுகிறது. வித்யோதயாவில் அப்பகுதியைச் சுற்றி 300க்கும் அதிகமான கிராமங்களைச் சேர்ந்த ஆதிவாசி குழந்தைகள் பயில்கின்றனர்.இந்தியாவில் அதிக அளவில் கல்வியை பாதியிலேயே கைவிடும் மாணவர்கள் ஆதிவாசி சமூகத்தைச் சார்ந்தவர்கள்தான். ஆனால் தற்போது வித்யோதயா பள்ளியில் எந்த குழந்தையும் படிப்பை கைவிடுவது இல்லை. காரணம், இப்பள்ளியில் பழங்குடி மக்களின் வரலாறு, வாழ்வியல், கலாச்சாரம் சார்ந்த கல்விமுறையில் ஆதிவாசி குழந்தைகள் பயில்கின்றனர். பிரச்சனை ஆதிவாசி குழந்தைகளிடம் இல்லை, அவர்களுக்கு அளிக்கப்பட்ட கல்விமுறையில்தான் இருந்துள்ளது.

‘‘ஒரு கலாச்சாரத்தை ஆவணப் படுத்திப் பாதுகாப்பதைவிட, அதை ஊக்குவித்து பழகும் போதே அந்த கலாச்சாரம் பாதுகாக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக பள்ளிகளில் அறிமுகப்படுத்தி அடுத்த தலைமுறையினருக்கு ஒரு பண்பாட்டை நீடித்துச் சென்று ஒப்படைக்கும்போது, அக்கலாச்சாரம் வெற்றியடைகிறது” என்று வித்யோதயா பள்ளி உறுப்பினர்கள் நம்புகின்றனர்.  வித்யோதயாவில் காலை முதல் மதியம் வரை தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் சமச்சீர் கல்வி கற்பிக்கப்படுகிறது. மதிய உணவிற்குப் பின் பழங்குடியினரின் வாழ்வியல், வரலாறு, கலாச்சாரம் சார்ந்த பாடங்களும் விளையாட்டுகளும் மலை, காடுகள் சார்ந்த வாழ்க்கைமுறை பாடங்களும் இடம்பெறுகின்றன.

காலை வழிபாடு சமயத்தில் அரை மணி நேரம் பழங்குடியினரின் நடனம், இசை, கதைகளுடன் நாளிதழ் வாசிப்புகள், நாடகங்கள், நல்ல கருத்துகள், செய்திகள் சொல்லும் காணொளிகள் என மாணவர்களின் அன்றைய தினம் தொடங்குகிறது, பத்தரை மணியளவில், குழந்தைகளுக்கு ஆரோக்கியமான பயிறு, முட்டை, ராகி போன்ற ஸ்நாக்ஸ் கொடுக்கப்படுகிறது.

மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரை கலை சார்ந்த வகுப்புகள் நடத்தப்படுகிறது. கைவினை பொருட்கள் செய்வது, ஓவியம், நாடகம்,  இசை என ஒரு மணி நேரமும், அடுத்த ஒரு மணி நேரம் கோலி குண்டு அடிப்பதிலிருந்து கால்பந்து வரை குழந்தைகள் தங்களுக்குப் பிடித்தமான விளையாட்டை ஆடுகின்றனர். கடைசி பத்து நிமிடங்கள், மாணவர்கள் தங்கள் வகுப்புகளையும், புத்தகங்களையும் ஒருங்கிணைத்து சுத்தப்படுத்துவார்கள். நான்கு மணிக்கு பள்ளி முடிவடையும்.

இப்பள்ளியின் மற்றொரு சிறப்பு, இங்கு ஆசிரியர் பணியில் இருக்கும் ஐவரில் மூன்று பேர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். ACCORD என்ற அமைப்பு 90களில், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த படித்த  இளைஞர்களை ஒன்று திரட்டி, அவர்களுக்கு விருப்பமான துறையில் பயிற்சி அளித்தது. அதில், ஆசிரியர் பயிற்சி பெற்று, வித்யோதயா பள்ளி மூலம் தங்களின் அடுத்த தலைமுறையினரை திறமைசாலிகளாக உருவாக்கி வருகின்றனர் ஆதிவாசி இளைஞர்கள்.  

வித்யோதயா பள்ளியின் ஆரம்ப காலம் முதல் தன் ஆசிரியர் பணியைச் சிறப்பாக செய்து வருபவர், சாந்தி குஞ்சன்.  இவர் நீலகிரியில் தேவாலா என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். ‘‘நான் சின்ன பொண்ணா இருந்தபோது, பழங்குடி பிள்ளைகள் யாருமே பள்ளிக்கு போனது இல்லை. நான் ஒரு தனியார் பள்ளியில்தான் படிச்சேன். என் தாய் மொழி பனியா. தமிழ் எங்களுக்கு அன்னிய மொழிதான். ஆனால் தனியார் பள்ளி விடுதியில் தங்கிப் படிச்சதால், என் கலாச்சாரத்தின் வாசமே இல்லாமல் வளர்ந்தேன். விடுமுறையில் வீட்டிற்கு போன போதுதான் எங்களின் பண்பாடு எவ்வளவு அன்னியமாகிடுச்சுனு புரிஞ்சுது.           
 
எனக்கு சின்ன வயசிலிருந்தே டீச்சர் ஆகணும்னுதான் ஆசை. அதனால, ACCORD அமைப்பில் ஆசிரியர் பயிற்சி எடுத்துக்கிட்டேன். எங்க குழந்தைகளுக்கே கல்வி கற்பிக்கும் வாய்ப்பும் கிடைச்சது பெரிய வரம்தான். தினமும் காலையில இருபது கி.மீ. பயணம் செய்து பள்ளிக்கு வரனும். எங்க அமைப்பின் உதவியோட ஒரு வேன் ஏற்பாடு செய்து, என் கூட சில பிள்ளைகளையும் காலையில அந்த வேன்ல கூட்டிட்டு வந்திருவேன். எங்க மாணவர்கள் மட்டும் இல்லாம அவங்க பெற்றோர்களும் எங்க பள்ளியில் ஒரு முக்கிய அங்கம்தான். எல்லோரும் சேர்ந்துதான் இந்த பள்ளி உருவாக காரணம்” என்கிறார்.  

மற்ற பள்ளிகளைப் போல, இங்கு ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள் யாருமே அன்னியர்கள் இல்லை. இங்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவருமே ஆதிவாசி முன்னேற்றச் சங்கத்தின் உறுப்பினர்கள்தான். மாணவர்களும் ஆதிவாசி சங்கத்தின் மூலமாகவே விண்ணப்பித்து பள்ளியில் சேருவார்கள்.

இப்பள்ளியில் அனைவரும் குழுவாக செயல்பட்டு தங்கள் சமூகத்தின் அடுத்த தலைமுறையினரைப் பொறுப்புடன் வளர்க்கின்றனர். தற்போது ஆதிவாசி முன்னேற்றச் சங்கத்தின் தொடர் முயற்சிகளால் கூடலூரிலுள்ள நூறு சதவீத பழங்குடியினரின் குழந்தைகள் ஒன்றாம் வகுப்பில் தனியார் அல்லது அரசுப் பள்ளிகளில் சேர்க்கின்றனர். இருப்பினும் குழந்தைகள் இடையே நிற்காமல் தொடர்ந்து பள்ளிப்படிப்பை முடிப்பது ஒரு சவாலாக உள்ளது.

இந்த கொரோனா காலத்தில், கல்வி தடைப்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில், பெற்றோர்களும் ஆசிரியர்களும் தொலைபேசியில் ஒன்றிணைந்து ஆலோசித்துள்ளனர். அதில், வகுப்புகள் காணொளியாக காட்சியாக்கப்பட்டுப் பெற்றோர்களின் கைப்பேசிக்கு அனுப்ப முடிவெடுத்துள்ளனர். கைப்பேசி இல்லாதவர்களுக்கு ஆசிரியர்கள் சிலர் தங்களின் கைப்பேசியை சில மணி நேரம் கொடுத்து உதவியும் செய்கின்றனர்.

இவர்களது எதிர்கால தேவையாக 12ஆம் வகுப்பு வரை இலவச கல்வியை அளிக்கும் ஆதிவாசி பள்ளி இருந்தால், பழங்குடியினரின் அடையாளத்துடன் குழந்தைகள் வளர்வர் என்பது இவர்களது விருப்பமாக இருக்கிறது. ஆதிவாசி முன்னேற்றச் சங்கம், சிறப்புப் பள்ளி மட்டுமில்லாமல், ஆதிவாசி மக்களுக்கான சிறப்பு மருத்துவமனையான அஸ்வினியையும் நடத்தி வருகின்றனர். இந்த மருத்துவமனையிலும் ஆதிவாசி சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள் பலர்  வேலை செய்கின்றனர்.

ஸ்வேதா கண்ணன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags : classroom ,
× RELATED போலீஸ் விசாரணை உப்பிலியபுரம்...