திருவனந்தபுரத்தில் 18ம் தேதி சர்வதேச திரைப்பட விழா: முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைக்கிறார்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 18ம் தேதி நடைபெறும் 26வது சர்வதேச திரைப்பட விழாவை முதல்வர் பினராயி விஜயன் விழாவை தொடங்கி வைக்கிறார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வருடம் தோறும் 8 நாள் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இது கோவா திரைப்பட விழாவுக்கு அடுத்தபடியாக மிகவும் பிரசித்தி பெற்றதாகும். வழக்கமாக டிசம்பர் மாதம் 2வது வாரத்தில் தான் விழா நடத்தப்படும். ஆனால் கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதத்திற்கு சர்வதேச திரைப்பட விழா தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி வரும் 18ம் தேதி விழா தொடங்குகிறது.

இந்த விழாவை மாலை 6 மணி அளவில் திருவனந்தபுரம் நிஷாகந்தி அரங்கத்தில், முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைக்கிறார். 25ம் தேதி வரை விழா நடைபெறுகிறது. இதில் ஆப்கானிஸ்தான், கொரியா, ஈரான், ஜப்பான் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 180க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்படுகின்றன. இந்திய சினிமா, வெளிநாட்டு சினிமா என்று 7 பிரிவுகளில் படங்கள் திரையிடப்படுகின்றன. போட்டிப் பிரிவில் மொத்தம் 14 படங்கள் கலந்து கொள்கின்றன. 25ம் தேதி நடைபெறும் இறுதி விழாவில் சிறந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. விழாவில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் சிறந்த திரைப்பட கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர்.

Related Stories: