மாஜி அமைச்சர் பெயரை கூறி மிரட்டல் அதிமுக ஆட்சியில் 30 மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லை: மதுரை கலெக்டர் ஆபீசில் பெண் தர்ணா

மதுரை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த வேலு மனைவி வசந்தி. இவர் கடந்த அதிமுக ஆட்சியின்போது, 30க்கும் மேற்பட்ட மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, ஏற்கனவே கொடுத்த மனுக்களின் நகல்களோடு மதுரை கலெக்டர் அலுவலக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் நேற்று ஈடுபட்டார். இதுகுறித்து வசந்தி கூறுகையில், ‘எனது கணவர் வேலு. விஏஓவாக பணி புரிந்தார். 2003ம் ஆண்டு உடல்நலக்குறைவால் இறந்தார். அவருக்கு தமிழக அரசின் சார்பில் நிதியுதவி கொடுக்கப்பட்டது.

அந்த பணத்தில், மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட கொக்குளப்பி பகுதியில் 2004ம் ஆண்டு நான்கரை சென்ட் இடம் வாங்கினேன். இந்த இடத்தை விற்பனை செய்ய முயன்றபோது, முக்கால் சென்ட் இடம் வேறு ஒருவர் பெயரில் பட்டா இருப்பது தெரியவந்தது. இதனால் நிலத்தை அளந்து, நில ஆக்கிரமிப்பை மீட்டுத்தர கோரி கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 30க்கும் மேற்பட்ட முறை மனு கொடுத்தேன். நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் பெயரை கூறி, நான் அதிமுகவை சேர்ந்தவன் என மிரட்டி வந்தார்.

இதனால் அந்த இடத்தை பல ஆண்டுகளாக அளந்து கொடுக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். மனுக்கள் மீது அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்றார்.இதே கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அனீஷ்சேகரிடம் நேற்று மனு கொடுத்தார். இதன்பேரில் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார்.

Related Stories: