×

திருமழிசை பேரூராட்சி மறைமுக தேர்தலின் சிசிடிவி பதிவுகளை பாதுகாக்க வேண்டும்: மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திருமழிசை பேரூராட்சி மறைமுக தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை பாதுகாக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின் மார்ச் 4ம் தேதி மறைமுக தேர்தல் நடந்தது. இதில் திருமழிசை பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் எட்டு வார்டுகளை கைப்பற்றிய அதிமுக உறுப்பினர்களில், இருவரின் வாக்குகள் செல்லாதவை என கூறி ஏழு உறுப்பினர்களை கொண்ட திமுக-வைச் சேர்ந்த உறுப்பினர் பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

இதை எதிர்த்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக கவுன்சிலர் ரமேஷ் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பா.ம.க. கவுன்சிலர் ராஜேஷ் மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இரு அதிமுக கவுன்சிலர்களின் வாக்குகள் செல்லாதவை என அறிவிக்க காரணம் என்ன எனக் கேட்டு அளித்த மனுவை தேர்தல் அதிகாரியும், மாநில தேர்தல் ஆணையமும் பரிசீலிக்கவில்லை. வாக்குச்சீட்டை திருத்திய தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது, இதுசம்பந்தமாக தேர்தல் வழக்கு தான் தாக்கல் செய்ய முடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதை ஏற்று, வழக்கை திரும்பப் பெறுவதாக கூறிய மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர், தேர்தல் வழக்குக்கு ஆதாரமாக உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதையடுத்து, திருமழிசை பேரூராட்சி மறைமுக தேர்தலில் போது பதிவு செய்யப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை பாதுகாக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை வாபஸ் பெற அனுமதித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags : Thirumalisai Municipality ,ICC ,State Election Commission , Thirumalisai Municipality, Indirect Election, CCTV Record, iCourt
× RELATED டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன்...