×

ரஷ்ய தாக்குதலால் உக்ரைனில் 600 அப்பாவி பொதுமக்கள் பலி...1,067 பேர் காயம்... 28 லட்சம் அகதிகளாக வெளியேற்றம்!!

கீவ் : ரஷ்யா போர் தொடுத்துள்ளதன் காரணமாக இதுவரை உக்ரைனில் 600 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 1,067 பேர் காயம் அடைந்துள்ள நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உக்ரைனில் ரஷ்ய படைகள் நாளுக்கு நாள் தாக்குதலை தீவிரப்படுத்தி வருவதால், உக்ரைன் எதிர்கொள்ளும் சேதங்கள் அளவிட முடியாத அளவிற்கு பெருகி செல்கிறது. ரிவனே நகரில் தொலைக்காட்சி கோபுரம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். 9 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். ரஷ்யாவின் குண்டுவீச்சு தாக்குதலில் மரியும்போல் நகரமே பற்றி எரிகிறது.

அந்த நகரம் முழுவதும் எங்கும் நெருப்பும் புகையுமாக காட்சி அளிக்கிறது.உக்ரைனின் 2வது பெரிய நகரமான கார்கிவ்விலும் ரஷ்ய படைகள் ஓயாது குண்டு மழை பொழிகின்றன. கார்க்கீவில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் அமைப்பு சதுக்கம் குண்டு வீச்சால் சிதிலமடைந்து உள்ளது. குடியிருப்புகள் மீது ஏவுகணைகள் பாய்ந்து சேதம் அடைந்துள்ளன. தலைநகர் கீவ்வில் இருந்து 25கிமீ தொலைவில் இர்பின் நகரமும் ரஷ்ய படைகளின் தாக்குதலால் உருக்குலைந்து காணப்படுகிறது. குடியிருப்புகள் இடிந்து சாலைகள்   
சேதமடைந்து, குப்பை மேடாக காட்சி தருகின்றன.போர் நாளுக்கு நாள் உக்கிரமாகி கொண்டு வருவதால் தேவையான உணவு, மின்சாரம், எரிவாயு, மருத்துவ சேவைகள் கிடைக்கவில்லை. இதனிடையே
உக்ரைனில் இருந்து 28 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி இருப்பதாக ஐ.நா.கூறியுள்ளது.

போர் தொடங்கியது முதல் அதிகபட்சமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் வரை தஞ்சம் கேட்டு மற்ற நாடுகளுக்கு சென்றதாகவும், இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ஒரு நாளில் நிகழ்ந்த உச்சபட்ச இடம்பெயர்வு என ஐ.நா. அகதிகளுக்கான முகமை தெரிவித்துள்ளது.அதிகபட்சமாக போலந்தில் 18 லட்சம் பேர் புகலிடம் கேட்டும் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 10 லட்சம் குழந்தைகள் கல்வி, ஊட்டச்சத்து மிக்க உணவு உள்ளிட்டவற்றை இழந்துள்ளதாக ஐ.நா. குழந்தைகளுக்கான நிதியம் தெரிவித்துள்ளது.

Tags : Ukraine , Russia, attack, Ukraine, civilians
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...