×

பத்திரிகை பேட்டி வாயிலாக இல்லாமல் நீதிமன்றத்தில் தான் நிரபராதி என்று ஜெயக்குமார் நிரூபிக்க வேண்டும்: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவுரை

சென்னை: ஜெயக்குமார் நீதிமன்றத்தில்தான் தன்னை நிரபராதி என்று நிரூபிக்க வேண்டுமே தவிர இப்படி பத்திரிகைப் பேட்டிகள் வாயிலாக அல்ல என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, அராஜகமாகச் செயல்பட்டு, ஏதோ தானே ஒரு சினிமா போலீஸ் அதிகாரி போல் நினைத்துக்கொண்டு, தி.மு.க. தொண்டரை இழிவாக நடத்திய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஆணவச் செயலை அனைத்து ஊடகங்களும் காட்சிப்படுத்திய பிறகும் கூட, “அ.தி.மு.க.வை எச்சரிப்பதற்காக என்னைக் கைது செய்திருக்கிறார்கள். என் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை” என அவர் வழக்கம்போல் அபாண்டமாகப் புளுகியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் அர்த்தமற்ற அவதூறுகளைப் புறந்தள்ளி, ஆக்கப்பூர்வமான கருத்துகள் இருந்தால் அவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து, காது கொடுத்துக் கேட்கும் ஒரு முதல்வரைத் தமிழ்நாடு பெற்றிருப்பதைத் ஜெயக்குமாரால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை.

“நில அபகரிப்பு”, “பொது வெளியில் அராஜகம்”, “கொலை முயற்சி வழக்கு” உள்ளிட்ட புகார்களுக்குத் ஜெயக்குமார் நீதிமன்றத்தில்தான் தன்னை நிரபராதி என்று நிரூபிக்க வேண்டுமே தவிர இப்படி பத்திரிகைப் பேட்டிகள் வாயிலாக அல்ல. சட்ட அமைச்சராக இருந்தவருக்குச் சட்டத்தின் அரிச்சுவடியைச் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டு விட்டதே என்ற ஆதங்கம்தான் ஏற்படுகிறது.

ஜெயக்குமார் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும் இல்லை. இணை ஒருங்கிணைப்பாளரும் இல்லை. சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லை. ஆகவே அவரை கைது செய்வது அ.தி.மு.க.வை எச்சரிப்பதாக எப்படி அமையும். ஜெயக்குமார் எத்தனையோ அவதூறு பேட்டிகளைக் கொடுத்தாலும், அதற்காக அவர் கைது செய்யப்படவில்லை. அதுவே எங்கள் தலைவர் காட்டிய பெருந்தன்மை. ஆனால் முன்னாள் அமைச்சராக இருந்த ஜெயக்குமாரே சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு ‘மெயின் ரோட்டில்’ அராஜகத்தில் ஈடுபடும் போது சட்டத்தின் ஆட்சிதான் அவரை கைது செய்ததே தவிர தி.மு.க.வோ, எங்கள் தலைவரோ இல்லை என்பதை அவர் புரிந்துகொள்வது நல்லது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Jayakumar ,DMK ,RS Bharathi , Jayakumar has to prove his innocence in court without going through a press conference: DMK secretary RS Bharathi
× RELATED வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார்:...