×

2வது டெஸ்டிலும் அபார வெற்றி இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா: கருணரத்னே ஆறுதல் சதம்

பெங்களூரு: இலங்கை அணியுடனான 2வது டெஸ்டில் 238 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 2-0 என தொடரை முழுமையாகக் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. இந்தியாவில் சுற்றுப்பயனம் மேற்கொண்ட இலங்கை அணி முதலில் விளையாடிய டி20 தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்தது. அடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. மொகாலியில் நடந்த முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை வசப்படுத்திய இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் கடந்த 12ம் தேதி தொடங்கி நடந்து வந்தது (பகல்/இரவு).

டாஸ் வென்று பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 252 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஷ்ரேயாஸ் அதிகபட்சமாக 92 ரன் விளாசினார். அடுத்து களமிறங்கிய இலங்கை முதல் இன்னிங்சில் 109 ரன்னுக்கு சுருண்டது. ஏஞ்சலோ மேத்யூஸ் 43, டிக்வெல்லா 21 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இந்திய பந்துவீச்சில் பும்ரா 5, அஷ்வின், ஷமி தலா 2 , அக்சர் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 143 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 303 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. மயாங்க் 22, ரோகித் 46, ஹனுமா 35, பன்ட் 50, ஷ்ரேயாஸ் 67, ஜடேஜா 22 ரன் எடுத்தனர். இதைத் தொடர்ந்து, 447 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் துரத்தலை தொடங்கிய இலங்கை அணி, 2ம் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 28 ரன் எடுத்திருந்தது.

கேப்டன் திமத் கருணரத்னே 10 ரன், குசால் மெண்டிஸ் 16 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். பொறுப்புடன் சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 96 ரன் சேர்த்தது. குசால் 54 ரன் (60 பந்து, 8 பவுண்டரி) விளாசி அஷ்வின் சுழலில் ஸ்டம்பிங் செய்யப்பட, அடுத்து வந்த வீரர்கள் இந்திய சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அணிவகுத்தனர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் போராடிய கேப்டன் கருணரத்னே சதம் அடித்தார்.

அவர் 107 ரன் (174 பந்து, 15 பவுண்டரி) விளாசி பும்ரா வேகத்தில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினார். இலங்கை அணி 59.3 ஓவரில் 208 ரன் எடுத்து 2வது இன்னிங்சை இழந்தது. இந்திய பந்துவீச்சில் அஷ்வின் 4, பும்ரா 3, அக்சர் 2, ஜடேஜா 1 விக்கெட் கைப்பற்றினர். 238 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 2-0 என தொடரை கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான 12 புள்ளிகளும் இந்தியாவுக்கு கிடைத்தன. ஆட்ட நாயகனாக ஷ்ரேயாஸ், தொடர் நாயகனாக ரிஷப் பன்ட் தேர்வு செய்யப்பட்டனர்.

* அஷ்வின் 100
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 100 விக்கெட் கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமை இந்திய சுழல் நட்சத்திரம் ஆர்.அஷ்வினுக்கு கிடைத்துள்ளது. நேற்று இலங்கையின் விஷ்வா பெர்னாண்டோ
விக்கெட்டை வீழ்த்தியபோது அவர் இந்த சாதனை மைல்கல்லை எட்டினார்.

Tags : India ,Sri Lanka ,Karunaratne , India whitewash Sri Lanka in 2nd Test: Karunaratne's consolation century
× RELATED 4 ஐஎஸ் தீவிரவாதிகளை இந்தியாவே விசாரிக்கும்: இலங்கை அறிவிப்பு