பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் ஸ்வியாடெக்: எம்மா ரடுகானு ஏமாற்றம்

இண்டியன் வெல்ஸ்: அமெரிக்காவில் நடைபெறும் பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் தகுதி பெற்றார். 2வது சுற்றில் டென்மார்க்கின் கிளாரா டாவ்சனுடன் நேற்று மோதிய ஸ்வியாடெக் 6-7 (3-7) என்ற கணக்கில் முதல் செட்டை டை பிரேக்கரில் இழந்து பின்தங்கினார். பின்னர் சுதாரித்துக் கொண்டு அதிரடியாக விளையாடிய அவர் 6-2, 6-1 என அடுத்த 2 செட்களையும் கைப்பற்றி வெற்றியை வசப்படுத்தினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 2 மணி, 18 நிமிடத்துக்கு நீடித்தது.

மற்றொரு 2வது சுற்றில் ருமேனியா நட்சத்திரம் சிமோனா ஹாலெப் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் கோகோ காஃபை வீழ்த்தினார். இங்கிலாந்தின் எம்மா ரடுகானு 7-6 (7-3), 4-6, 5-7 என்ற செட் கணக்கில் குரோஷியா வீராங்கனை பெத்ரா மார்டிச்சிடம் போராடி தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். இப்போட்டி 2 மணி, 46 நிமிடத்துக்கு நடந்தது. முன்னணி வீராங்கனைகள் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), மேடிசன் கீஸ் (அமெரிக்கா), சொரானா சிர்ஸ்டீ (ருமேனியா), சாம்சனோவா (ரஷ்யா) ஆகியோரும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

Related Stories: