×

கல்பாக்கம் அருகே பரபரப்பு; 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லையுடன் கொலை மிரட்டல்: வைரலாகும் 2 வீடியோ

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அருகே 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதுடன், அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதால் தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அந்த சிறுமிகள் 2 வீடியோ வெளியிட்டுள்ளனர். கல்பாக்கம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த கணவரை இழந்த பெண் ஒருவருக்கு குமாரி (17), செல்வி (15) என்ற 2 மகள்கள் (பெயர்கள் மாற்றப்பட்டு உள்ளன) உள்ளனர். இந்த 2 சிறுமிகளும் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 2 வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.

அதில் குமாரி பேசுகையில், ‘’நானும் என் தங்கை செல்வியும் கல்பாக்கம் அருகே மேல்பெருமாள்சேரி கிராமத்தை சேர்ந்தவர்கள். எங்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரவே பயமாக உள்ளது. வெளியே வந்தால், உங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வெச்சிருக்கில்ல…வந்தா உயிரோடு கொளுத்திவிடுவோம் என அப்பகுதியை சேர்ந்த பாமக நிர்வாகிகள் தினேஷ், எல்லப்பன் ஆகிய இருவர் உள்பட சிலர் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இதுகுறித்து மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரை மிரட்டி வாபஸ் வாங்க வெச்சுட்டாங்க.

அவர்கள் எங்கள் 3 பேரையும் சாகடிப்பதற்குள், நாங்களே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொள்கிறோம். எனினும், அக்கிராமத்தை சேர்ந்த சிலர் எங்களுக்கு பாலியல் தொல்லையும் கொடுக்கிறாங்க. எங்களை நீங்கள்(தமிழக முதல்வர்)தான் காப்பாற்ற வேண்டும் என குமாரியின் கண்ணீர் வரிகள் நீள்கிறது. இந்த வீடியோ தற்போது பல்வேறு சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத் தரப்பில் விசாரித்தபோது, அப்பெண் கொடுத்த புகாரில் உண்மை தன்மை இல்லை. யார் பேச்சையோ கேட்டு, இதுபோன்ற பொய் புகார்களை தருகிறார் என்கின்றனர். மேலும், அக்கிராமத்தை சேர்ந்த சிலர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர்.

அதில், அக்கிராமத்தில் வடிவேல் என்பவர் பண்ணை வீட்டில் சாமியார் வேடத்தில் குறி சொல்லி வருகிறார். அவர் இரவு நேரங்களில் தன்னிடம் வரும் விஐபிக்களுக்கு குமாரி, செல்வி போன்ற பெண்களை வைத்து, ஏதோ தவறான காரியங்கள் செய்து வருகிறார். அவரை தட்டி கேட்டால், எங்கள்மீது இதுபோன்ற சிறுமிகளை வைத்து பொய் புகார் அளித்து வருகிறார். குமாரியும் செல்வியும் எங்களின் உறவினர்கள்தான். வடிவேலிடம் அடிமையாக உள்ள 2 சிறுமிகளையும் மீட்டு கொடுங்கள் என மற்றொரு வீடியோவில் கூறியுள்ளனர். இந்த வீடியோவும் சமூகவலை தளப்பக்கங்களில் வைரலாகி வருகிறது.

Tags : Kalpakam , Agitation near Kalpakkam; Death threats with sexual harassment to 2 girls: Going viral 2 video
× RELATED மிக்ஜாம் புயல் காரணமாக திருவள்ளூரில் பேருந்து சேவை நிறுத்தம்