×

வரலாற்று சின்னமாக விளங்கும் இரணியல் அரண்மனை பழமை மாறாமல் மறுசீரமைக்கும் பணி தொடக்கம்-சாரம் அமைக்கும் பணி நிறைவு

நாகர்கோவில் :  வரலாற்று சின்னமாக விளங்கும் இரணியல் அரண்மனை மறுசீரமைப்பு பணிகள் தொடங்கி உள்ளன. பழமை மாறாமல் கட்டுமான பணிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி இணைந்தது. முந்தைய காலத்தில் திருவனந்தபுரம் முதல் ஆரல்வாய்மொழி வரையிலான பகுதியை வேணாடு என்று அழைத்தனர். அந்த வேணாட்டு தலைநகராக விளங்கியது, தற்போதைய குமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் ஆகும். இதற்கு சான்றாக இரணியலில் அமைந்துள்ள அரண்மனையை கூறுவார்கள். இந்த அரண்மனை கி.பி. 12ம் நூற்றாண்டில் இருந்து வேணாட்டு அரசர்களின் தலைமையிடமாக செயல்பட்டு வந்ததாக வரலாறு கூறுகிறது.

இந்த அரண்மனையில் கடைசியாக உதயமார்த்தாண்ட வர்மா ஆட்சி செய்தார். அதன் பின்னர் தான் தலைநகரை பத்மநாபபுரத்துக்கு மாற்றினர்.குமரி மாவட்டம் கேரளாவுடன் இருந்த வரையில் இரணியல் அரண்மனையும் மிகவும் பாதுகாப்புடன் இருந்தது. அதன் பின்னர் பராமரிப்பு இல்லாத நிலைக்கு போனது. தொல்பொருள் துறையிடம் இந்த அரண்மனையை ஒப்படைத்து சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ஆனால் 2014ல் ஆட்சியில் இருந்த அப்போதைய மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இந்த அரண்மனையை அறநிலையத்துறையே சீரமைக்கும் என கூறி ரூ.3.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார். ஆனால் அதன் பின்னர் எந்த பணியும் தொடங்க வில்லை.

இந்த அரண்மனை அமைந்துள்ள இரணியல் பகுதி, குளச்சல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டு வருகிறது.  இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வான பிரின்ஸ், இந்த பிரச்னை தொடர்பாக சட்டமன்ற கூட்டத்தொடர்களில் கேள்வி எழுப்பினார். போராட்டங்களும் நடத்தினார். ஆனால் இரணியல் அரண்மனை சீரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. அரண்மனை கிட்டத்தட்ட தரைமட்டமாகும் நிலைக்கு வந்ததுடன், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறியது.  

 இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும், பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என உத்தரவிட்டார். அவரின் கவனத்துக்கு இரணியல் அரண்மனையின் நிலவரமும் கொண்டு செல்லப்பட்டது. முதலமைச்சரின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், இரணியல் அரண்மனைக்கு சென்று பார்வையிட்டார். இரணியல் அரண்மனை எப்படி இருந்ததோ அதே பாணியில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்படி மறுசீரமைப்பு பணிகள் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

ஏற்கனவே தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த ரூ.3.85 கோடி செலவில் இதை சீரமைக்க முடியாது. கூடுதல் நிதி தேவைப்படும் என்றும் அமைச்சர் மனோ தங்கராஜிடம் அதிகாரிகள் அறிவுறுத்தினர். முதலமைச்சரின் கவனத்துக்கு இதை கொண்டு சென்று கூடுதல் நிதி ஒதுக்கீடு பெற்று தரப்படும். தற்போது ஏற்கனவே அறிவித்த ரூ.3.85 கோடியில் பணிகளை தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதன்படி மறு சீரமைப்பு பணிகளுக்கான வேலைகள் நடந்து வருகின்றன. முதற்கட்டமாக அரண்மனை அமைந்துள்ள பகுதிகளை சுற்றி இருந்த புதர்கள் வெட்டி அகற்றப்பட்டன. தற்போது அரண்மனை கட்டிட பகுதிகள் மறுசீரமைக்கும் பணி தொடங்க உள்ளது. இதற்காக தற்போதுள்ள அந்த பழைய கட்டிடத்தை இடிக்கும் பணிகள் இன்று (திங்கள்) தொடங்கப்பட உள்ளது. கட்டிடத்தை அகற்றுவதற்காக சாரம் அமைக்கும் பணிகள் நேற்று முடிவடைந்தது. முதற்கட்டமாக பழைய கட்டிடத்தில் உள்ள மரங்கள் அகற்றப்பட உள்ளன. பின்னர் கட்டிடம்  எப்படி இருந்ததோ அதே போல் பழமை மாறாமல் மறுசீரமைப்பு செய்யப்பட  உள்ளது.

இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட செங்கல்கள் ராஜபாளையத்தில் இருந்து வந்துள்ளன. இந்த செங்கல்கள் சாதாரண செங்கல் போல் இல்லாமல், மிகவும் கனம் குறைந்த ஸ்லிம் வகையிலான செங்கல்கள் ஆகும். சுமார் 1 லட்சம் செங்கல்கள் தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 25 ஆயிரம் செங்கல்கள் வந்துள்ளன. சுண்ணாம்பு கலவை கொண்டு கட்டுமான பணிகள் நடக்க இருக்கின்றன. இதற்கான கட்டுமான குழுவினரும் இன்று காலை இரணியல் வர உள்ளனர். மறுசீரமைப்பு பணிகளை எவ்வளவு விரைவில் முடிக்க முடியுமோ? அவ்வளவு விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

சாரம் அமைக்கும் பணி நிறைவு

பளிங்கு படுக்கை

பல பொக்கிஷங்கள் இந்த அரண்மனையில் இருந்துள்ளன. அரண்மனையின் படுக்கை அறையில் எட்டரை அடி நீளமும், நான்கரை அடி அகலமும் ெகாண்ட பளிங்கு கல்லால் ஆன படுக்கை இருந்துள்ளது. இந்த படுக்கை இன்னும் அப்படியே உள்ளது. பளிங்கு படுக்கையும் புதுப்பிக்கப்பட உள்ளது. இந்த அரண்மனை பக்கத்தில் மார்த்தாண்டேஸ்வரர் கோயில் உள்ளது. இதுவும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் தான் இருந்து வருகிறது. அரண்மனையில் முன்பு பல அரிய வகை சிற்பங்கள், தானியங்களை சேமித்து வைக்கும் குலுக்கை உள்ளிட்ட பாரம்பரிய பொருட்கள் இருந்துள்ளன. இவை எல்லாமே காணாமல் போய் விட்டதாக அந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள்.



Tags : Palace Palace , Nagercoil: Reconstruction work of the historic Destiny Palace has begun. Antique unchanged construction
× RELATED வெண்ணிற ஆடை போர்த்திய சீனாவின்...