போன் ஒட்டுக் கேட்பு வழக்கு மாஜி முதல்வர் பட்நவிசிடம் விசாரணை

மும்பை: போன் ஒட்டுக் கேட்கப்பட்டது தொடர்பான வழக்கில் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிசிடம் சைபர் குற்றப்பிரிவு போலீசார் நேற்று 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், பாஜ மூத்த தலைவரும், தற்போதைய சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்நவிஸ், மும்பையில் போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய பெருமளவில் லஞ்சம் வழங்கப்படுவதாக கடந்தாண்டு குற்றம் சாட்டினார். ஒரு போலீஸ் அதிகாரி அப்போது போலீஸ் டிஜிபி ஆக இருந்த அதிகாரிக்கு எழுதிய கடித்தில் இந்த விவரங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஒரு போலீஸ் அதிகாரி உயர் அதிகாரிக்கு எழுதிய கடிதம் அரசு ரகசியம். இந்த ரகசிய கடிதம் பட்நவிசுக்கு எப்படி கிடைத்தது. அரசு ரகசியத்தை அம்பலப்படுத்தியது யார் என்ற கேள்வி எழுந்தது.

இதனால் அரசியல் சர்ச்சையும் எழுந்தது. இது தொடர்பாக முன்னாள் தலைமை செயலாளர் சீத்தாராம் குந்தே விசாரணை நடத்தி அரசிடம் ஒரு அறிக்கை தந்தார். அதில், மகாராஷ்டிரா போலீஸ் புலனாய்வுத் துறை கமிஷனராக இருந்த ராஷ்மி சுக்லாதான், அரசியல் தலைவர்கள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளின் போன்களை ஒட்டுக் கேட்டு அந்த விவரங்களை டிஜிபி.க்கு கடிதமாக எழுதியதாகவும், இந்த ரகசிய கடிதத்தை கசிய விட்டதும் அவர்தான் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை பாந்த்ரா குர்லா காம்ப்ளக்சில் உள்ள சைபர் குறப்பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் பல நோட்டீசுகள் அனுப்பியும் பட்நவிஸ் ஆஜராகவில்லை. நேற்று முன்தினம் ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில், தெற்கு மும்பையில் இருக்கும் சாகர் என்ற பட்நவிசின் பங்களாவுக்கு நேற்று மதியம் போலீசார் சென்று அவரிடம் 2 மணி நேரம் விசாரித்தனர்.

Related Stories: