சாலை மற்றும் பாலப்பணிகளை கண்காணிக்க நெடுஞ்சாலை ஆணையத்தில் தமிழக அதிகாரிகள் நியமனம்: நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனர் கடிதம்

சென்னை: பல்வேறு திட்டத்தின் கீழ் நடைபெறும் சாலைகள் மற்றும் பாலப்பணிகளை கண்காணிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் தமிழக அதிகாரிகளை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனர் அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனர் குமார் அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் கோட்ட பொறியாளர்கள், உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையரகத்தில் அயல்பணியில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களின் பணி விவரங்களை தங்களது சார்நிலை அலுவலகங்களில் இருந்து பெற்று ஒருங்கிணைந்த அறிக்கையினை விரைந்து இவ் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அயல்பணியில் பணிபுரிய விருப்பம் தெரிவிக்கும் கோட்டப் பொறியாளர்கள், உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் நான்கு வருடம் மற்றும் அதற்கு மேல் பணிபுரிந்துள்ளவர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: