×

பி.எப் வட்டி குறைப்பு நியாயமற்றது: பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி மீதான ஆண்டு வட்டி விகிதம், 2021-22ம் ஆண்டில், 8.10% ஆக குறைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி ஒரே நேரத்தில் 0.40% குறைக்கப்பட்டிருப்பது அநீதியானது. வருங்கால வைப்பு நிதி மீது கடந்த 44 ஆண்டுகளில் இது தான் மிகவும் குறைவான வட்டியாகும். வருங்கால வைப்பு நிதி மீதான வட்டியை குறைப்பது தொழிலாளர்களுக்கு மிக மோசமான பாதிப்பைத் தான் ஏற்படுத்தும். வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் குறைக்கப்படுவதற்கு எந்த நியாயமும் இல்லை.

அதுமட்டுமின்றி, வருங்கால வைப்பு நிதி வாரியம் பங்கு சந்தையிலும், கடன் சந்தையிலும் செய்துள்ள முதலீடுகள் மீது 15% வரை வருவாய் ஈட்டியுள்ள நிலையில், அதிலிருந்து 8.5% வட்டி கூட வழங்க மறுப்பது பெரும் அநீதி ஆகும். நடப்பாண்டிலும் 8.5% அல்லது அதற்கும் கூடுதலான வட்டி வழங்க வாரியம் தயாராக இருந்தும் கூட, 8 விழுக்காட்டுக்கும் கூடுதலான வட்டி வழங்கக்கூடாது என்று ஒன்றிய நிதியமைச்சகம் அழுத்தம் தந்தது தான் வட்டிக் குறைப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

வங்கிகளில் செய்யப்படும் முதலீடுகளுக்கு 6.5% மட்டுமே வட்டி வழங்கப்படுகிறது என்பதால் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டியையும் குறைக்க வேண்டும் என்று கூறுவது நியாயமல்ல. வங்கிகளில் பெரும் பணக்காரர்களும், பெரு நிறுவனங்களும் தங்களிடம் உபரியாக உள்ள பணத்தை பாதுகாப்புக்காக வைப்பீடு செய்திருப்பார்கள். ஆனால், வருங்கால வைப்பு நிதி முதலீடுகள் அப்படிப்பட்டவை அல்ல. தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியம், அவர்களின் குடும்பச் செலவுகளுக்கு போதுமானது அல்ல என்றாலும் கூட, செலவுகளை குறுக்கிக் கொண்டு தான், எதிர்கால சமூகப் பாதுகாப்புக்காக வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்கின்றனர். அதன் மீதான வட்டியைக் குறைக்கக்கூடாது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Pama ,Ramdas , PF interest rate cut unjustified: Pama founder Ramdas condemned
× RELATED தர்மபுரி மாவட்டத்தில் கொண்டைக்கடலை அறுவடை பணி தீவிரம்