×

பல்கலைகளின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ரவியை நீக்க வேண்டும்: வைகோ அறிக்கை

சென்னை: பல்கலைக் கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ரவியை நீக்க வேண்டும், என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தென் மண்டல பல்கலைக் கழகங்களின் நூற்றுக்கும் மேற்பட்ட துணைவேந்தர்கள் பங்கேற்ற, கோவை மாநாட்டில் உரை ஆற்றிய ஆளுநர் ரவி, தமது அதிகார வரம்பை மீறி, அரசியல் கருத்துகளைப் பேசி இருப்பது கண்டனத்திற்கு உரியது. கூட்டு ஆட்சி பற்றிப் பேசுபவர்கள், ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இந்தியா என்பது வேறுபட்ட மக்களின் உடன்படிக்கையால் அமைந்தது அல்ல; இந்தியா என்ற நாடு, 1947ம் ஆண்டு பிறந்தது அல்ல என்று அவர் பேசி இருக்கின்றார். அப்படியானால், 1947க்கு முன்பு, இந்தியா என்ற நாடு, எங்கே இருந்தது என்பதை அவர் விளக்க வேண்டும்.

அரசு அமைப்புச் சட்ட நாடாளுமன்றத்தில், நீண்ட நெடிய கருத்துப் பரிமாற்றங்களின் முடிவில் அரசு அமைப்புச் சட்டத்தை வரைந்த அறிஞர்கள்தான், இந்தச் சொல்லைத் தேர்ந்து எடுத்து எழுதி இருக்கின்றார்கள். அதுவும், ஆளுநருக்குத் தெரியவில்லை. அந்த மாநாட்டில், காணொளி உரை ஆற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலின், அருமையான விளக்கம் அளித்து இருக்கின்றார். புதிய கல்விக்கொள்கை என்பது, பிற்போக்குவாதம். ஒன்றிய அரசு தனது பழமைவாதக் கருத்துகளை, பாடத்திட்டத்தின் வழியாக, மாணவர்களிடம் திணிக்க முயற்சிப்பது கவலை அளிக்கின்றது.

மாணவர்கள் இடையே, அறிவியல் மனப்பான்மையை, பல்கலைக்கழகங்கள் வளர்க்க வேண்டும். மாநில அரசுகளின் கல்விக்கொள்கையின்படிதான் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும் என்பது மக்களின் விருப்பம்; அதைத் துணைவேந்தர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வெறுமனே பட்டம் வழங்குவது மட்டும் பல்கலைக்கழகங்களின் கடமை அல்ல; அதன்பிறகு, அந்தத் தகுதிக்கு உரிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதும், பல்கலைக்கழகங்கள் பொறுப்பு ஆகும். எனவே, அத்தகைய திறன்சார்ந்த கல்வி மற்றும் பயிற்சிகளை, பல்கலைக்கழகங்கள் கற்பிக்க வேண்டும்.

இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு, நிலையான தீர்வு என்பது, முன்பு மாநிலங்களின் அதிகாரத்தில் இருந்து பறித்துக்கொண்ட கல்வியை, மீண்டும் மாநில அரசுகளுக்கே வழங்க வேண்டும் என அவர் பேசி இருக்கின்றார். மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசுகளின் செயல்பாடுகளுக்கு, முட்டுக்கட்டை போடுகின்ற வேலையைத்தான் ஆளுநர்கள் தொடர்ந்து செய்து வருகின்றார்கள். தமிழ்நாட்டின் முந்தைய ஆளுநர் தற்போதைய பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மேற்கு வங்கத்தின் தற்போதைய ஆளுநர் ஜெக்தீப் தங்கர் ஆகியோர், அரசு அமைப்புச் சட்டத்தைத் தொடர்ந்து மீறி வருகின்றனர்.

மேற்கு வங்க அரசை, முதல்வரை நாள்தோறும் கடுமையாக வசைபாடி, சுட்டுரைகள் எழுதி வருகின்றார் ஜெகதீப் தங்கர். 7 பேர் விடுதலை குறித்த பிரச்னையில், தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை, தமிழக ஆளுநர் ரவி திருப்பி அனுப்பி, ஏழரை கோடி தமிழர்களை அவமதித்து இருக்கின்றார். எனவே, அவர், ஆளுநர் பொறுப்பில் நீடிக்க அடிப்படை ஏதும் இல்லை. பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை நீக்க, மராட்டிய அரசு தீர்மானித்து இருக்கின்றது. அதேபோல, தமிழ்நாட்டின் பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து, ஆளுநர் ரவியை நீக்க வேண்டும்.

Tags : Governor ,Ravi , Governor Ravi should be removed from the charge of Vander of Universities: Vaiko Report
× RELATED செங்கோலை மீட்டெடுத்த தேசம்...