திருவொற்றியூர் தேரடி, விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையங்கள் திறப்பு: பயணிகள் வரவேற்பு

சென்னை: திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையங்கள் நேற்று திறக்கப்பட்டு ரயில் சேவை தொடங்கியது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, முதல்கட்ட பணிகள் நிறைவடைந்து சென்னை விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை இடையே முதல் வழித்தடத்திலும், சென்னை சென்ட்ரல் - பரங்கிமலை இடையே 2ம் வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதை தொடர்ந்து, வடசென்னை மக்கள் கோரிக்கைகை ஏற்று வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரை சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் விரிவாக்கம் செய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

ஆனால், திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிறுத்தம், விம்கோ நகர் பணிமனை ஆகியவற்றில் பணிகள் முழுமையாக நிறைவு பெறாததால் அங்கு மெட்ரோ ரயில் நிறுத்தப்படாமல், அதற்கு அடுத்த நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டு வந்தது. இதனால், மேற்கண்ட பகுதி மக்கள் சிரமப்பட்டனர். இந்நிலையில், விம்கோநகர் பணிமனை, திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிறுத்தத்தில் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றது. இதையடுத்து நேற்று காலை முதல் மேற்கண்ட 2 இடங்களும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.அதே நேரத்தில், திருவொற்றியூர் நிறுத்தத்தில் பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும் நகரும் படிக்கட்டுகள் இன்னும் அமைக்கப்படவில்லை. அதற்கு பதிலாக மின் தூக்கிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் திருவொற்றியூர் தேரடியில் நேற்று காலை முதல் மெட்ரோ ரயில் நின்று செல்ல தொடங்கி உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மாசி உற்சவத்தின்போது திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயிலில் இருந்து சுமார் 41 அடி உயரம் கொண்ட திருத்தேர் தேரடி சந்திப்பில் மெட்ரோ ரயில் பாதையை கடந்து திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக மீண்டும் எல்லையம்மன் கோயில் தெரு அருகே மெட்ரோ ரயில் பாதைக்கு கீழ் நுழைந்து தெற்கு மாடவீதி வழியாக கோயிலை சுற்றி கோயில் வாசலுக்கு வரும். இதனால் திருத்தேரில் உயரத்துக்கு ஏற்ப தேரடியில் இருந்து எல்லையம்மன் கோயில் வரை சுமார் 400 மீட்டர் தூரத்துக்கு வழக்கத்தை விட உயரமாக மெட்ரோ ரயில்பாதை அமைக்கப்பட்டுள்ளதால் தேரடி சந்திப்பில் நகரும் படிக்கட்டுகள் அமைப்பதற்கு போதிய இடவசதி கிடைக்கவில்லை. இதன் காரணமாகத்தான் தேரடி நிறுத்தத்தில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: