×

குரூப் 2, குரூப் 2ஏ விண்ணப்பதாரர்கள் இணையத்தில் இன்று முதல் திருத்தம் செய்யலாம்: டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவிப்பு

சென்னை: குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இணையதளம் மூலம் இன்று முதல் திருத்தங்களை செய்யலாம் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 பதவியில்(நேர்முக தேர்வு, நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 23ம் தேதி வெளியிட்டது. இத்தேர்விற்கு, இணையவழியில் விண்ணப்பிக்க வருகிற 23ம் தேதி கடைசி நாள் ஆகும்.

இத்தேர்விற்கு விண்ணப்பித்த தேர்வர்களில், பலர் விண்ணப்பத்தை இறுதியாக சமர்ப்பித்தப் பிறகு; சில தகவல்களை தவறாக உள்ளீடு செய்துவிட்டதாகவும், அவற்றை திருத்தம் செய்ய அனுமதிக்கக்கோரியும் தேர்வாணையத்தை தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டு வருகின்றனர். இந்த காரணங்களுக்காக விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதன் மூலம் வெற்றியைத் தவறவிடும் தேர்வர்களுக்கு, வாய்ப்பளிக்கும் வகையில் 14ம் தேதி(இன்று) முதல் இணையவழி விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள விரும்புவோர், விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாளான வருகிற 23ம் தேதி வரை விண்ணப்பதாரர்களே தனது ஓடிஆர் மூலமாக திருத்தம் மேற்கொள்ள தேர்வாணைய இணையதளமான  www.tnpscexams.inல் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

திருத்தம் செய்வதற்கு முதலில் தனது ஒருமுறை நிரந்தரப்பதிவில் (ஓடிஆர்) சென்று உரிய திருத்தங்களை செய்து அவற்றை சேமிக்க வேண்டும். அதன் பிறகு, விண்ணப்பத்திற்கு எதிரே உள்ள எடிட்டில் சென்று விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய விரும்பும் விவரங்களை திருத்தம் செய்து, இறுதியாக சேமித்து, அதனை சமர்ப்பித்து அதற்குரிய நகலினை அச்சுப்பிரதி எடுத்துக் கொள்ளவும். விண்ணப்பத்தில் திருத்தம் செய்த பிறகு, திருத்தப்பட்ட விவரங்களை இறுதியாக சேமித்து சமர்பிக்கவில்லை என்றால், தேர்வர் இதற்கு முன்பு சமர்ப்பித்துள்ள விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.

இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் செய்யக்கோரி தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலமாக தேர்வாணையத்தை  பல விண்ணப்பதாரர்கள் தொடர்பு கொண்டனர். அவர்களுக்கு விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, திருத்தம் செய்ய இயலாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, திருத்தம் செய்வதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளதால், கூறப்பட்டுள்ள நடைமுறையை பின்பற்றி தேவையான திருத்தத்தை மேற்கொள்ளலாம்.  தேர்வர்களுக்கு ஏற்படும் தவிர்க்க இயலாத சந்தேகங்களுக்கு, ஒருமுறை நிரந்தரப்பதிவு மற்றும் இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய helpdesk@tnpscexams.in என்ற மின்னஞ்சல் முகவரியையும், இதர சந்தேகங்களுக்கு grievance.tnpsc@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியையும் பயன்படுத்தலாம். இது தொடர்பாக விளக்கம் ஏதேனும் தேவைப்படுமானால், 18004190958 என்ற கட்டணமில்லா தொலைபேசிக்கு, அலுவலக வேலைநாட்களில், காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : DNPSC ,Exam Control Officer , Group 2, Group 2A applicants can make the first correction online today: DNBSC Exam Control Officer Announcement
× RELATED டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வர்களுக்கு இலவச வகுப்புகள்: கலெக்டர் தகவல்